சிங்களக் குடியேற்றக் கொள்கைகளுக்குப் பின்னால் உள்ள இஸ்ரேலிய செல்வாக்கு குறித்து ஒப்பீடு!

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையின் சிங்கள குடியேற்றக் கொள்கைகளுக்குப் பின்னால் உள்ள இஸ்ரேலிய செல்வாக்கு குறித்து இலங்கையின் பேராசியர் ஒருவர் ஆய்வு செய்துள்ளதை சர்வதேச ஊடகம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இந்த செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் புன்சர அமரசிங்க என்ற இந்த பேராசியரின் “இலங்கையில் குடியேறியவர்களின் கொள்கையின் பின்னால் இஸ்ரேலின் நிழல்கள்” என்ற தலைப்பிலான நூலில் குறித்த விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

இஸ்ரேலிய விவசாய மற்றும் இராணுவ மாதிரிகள், இலங்கையின் மீள்குடியேற்ற உத்திகளுக்கு குறிப்பாக தமிழர் தாயகத்தில், இராணுவ மயமாக்கப்பட்ட இனப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகளுக்கு உட்பொதித்து, இன்றுவரை தொடர்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேலிய குடியேற்ற விரிவாக்கத்திற்கும், இலங்கையின் வடக்கு கிழக்கின் சிங்களக் குடியேற்றத்திற்கும் இடையிலான ஒற்றுமைகளை கோடிட்டு, தேசத்தைக் கட்டியெழுப்பும் போர்வையில் அபிவிருத்தி, இடப்பெயர்வு மற்றும் இராணுவமயமாக்கல் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டன என்பதையும் இந்த ஆய்வில் பேராசிரியர் புன்சர அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் ஆற்றல் மற்றும் மீள்குடியேற்ற இலக்குகள் இஸ்ரேலிய முகவர் ஒருவரால் உருவாக்கப்பட்டது.
ஜே.ஆர்.ஜயவர்தனவின் நிர்வாகத்துடனான அவரது நெருங்கிய உறவுகளின் விளைவாக, விவசாய நிபுணர் என்ற போர்வையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டதாகவும் பேராசிரியர் புன்சர அமரசிங்கவின் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலிய கட்டிடக்கலை நிபுணர் உல்ரிக் பிளெஸ்னர் (Ulrik Plesner) 1981ஆம் ஆண்டு மலைநாட்டில் உள்ள மகாவலி குடியிருப்புகளில் புதிய நகரங்களைத் திட்டமிடுவதற்காக இலங்கைக்கு வந்தார் என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் யூத குடியேற்றங்களை நினைவூட்டும் அடிப்படை திட்டமிடல் கொள்கைகளை பிளெஸ்னர் இந்த திட்டத்துக்குள் இணைத்தார் என்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.