தியாக தீபம் திலீபனின் இறுதி நாள்  நினைவேந்தல்  தமிழர் தாயகத்தில் முன்னெடுப்பு

தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (26) பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டன.

திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல்  பருத்தித்துறையில் உள்ள அவரது நினைவாலயத்தில் இன்று காலை 8 மணி முதல் அடையாள உண்ணாவிரதத்துடன் வடமராட்சி மக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தியாகி திலீபனின் திருவுருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நினைவேந்தலில் கலந்துகொண்டவர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை, தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவேந்தல் இன்று திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் நடைபெற்றது.
இதனை சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்தனர்.
உணர்வுபூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், சுயாதீனமான சர்வதேச பொறிமுறை ஊடாக நீதி கிடைக்க வேண்டும் என இந்த தருணத்தில் கோரிக்கை விடுக்கிறோம் என்று தெரிவித்தார்.
அதேநேரம் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்று (26) காலை மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது திலீபனின் திருவுருவப்படத்துக்கு சுடர் ஏற்றப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன்  பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கொழும்பில் தியாக தீபம் திலீபனுக்கு இன்று இறுதிநாள் அஞ்சலியினை செலுத்தினார்.
இதேவேளை, நல்லூரில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலின்போது “நினைவேந்தலில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி வெளியேற வேண்டும்” என்ற தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த பொதுமகனுடன் சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் முரண்பட்டு தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக நிகழ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (26)  நல்லூரில் உள்ள பிரதான நினைவுத் தூபியடியில் நடைபெற்றபோது இந்த சம்பவம் நடைபெற்றது.
“எங்களுக்கான உரிமைப் போராட்டத்தில் எத்தனையோ போராளிகள் ஆயுத வழியிலும், அகிம்சை வழியிலும், தன்னைத்தானே வெடித்துச் சிதறியும் போராடியும் மாவீர்கள் ஆனார்கள். இவர்கள் இன்றும் எங்களுக்கு தெய்வங்களே. இந்த தெய்வங்களை நாம் வணங்குவதற்கு யாரும் தடைசெய்யவோ, அரசியல் ஆக்கவோ கூடாது’ என்று குறித்து துண்டு பிரசுரத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை தமிழர் தாயகத்தின் பல பகுதிகளில் இன்றைய தினம் தியாகதீபம் திலீபனின் நினைவேந்த நிகழ்வுகள் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் உள்ளிட்ட வெவ்வேறு அமைப்புகளினால் அனுஷ்டிக்கப்பட்டன.