கொழும்பு – டுபாய் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இரத்து : ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவிப்பு

கொழும்பு மற்றும் டுபாய்க்கு இடையே இயக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கொழும்பு – டுபாய் இடையே இயக்கப்படவிருந்த UL231 மற்றும் UL232 ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தமது விமானப் பயணங்களின் தற்போதைய நிலை குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகத் தொடர்ச்சியாக அவதானிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலதிக உதவிகள் தேவைப்படும் பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உலகளாவிய தொடர்பு மையத்தை தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்புகொள்ளலாம்.

தொலைபேசி இலக்கங்கள்

இலங்கைக்குள்: 1979

சர்வதேச ரீதியில் : +94 11 777 1979

அல்லது தமக்கு அருகிலுள்ள விமான சேவை அலுவலகங்கள் அல்லது பயண முகவர்களைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், இது தொடர்பான மேலதிக விபரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.