இலங்கையை விட்டு புறப்படும் சீன ஆராய்ச்சிக் கப்பல்

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான Yuan Wang 5 (யுவான் வாங் 5) இன்று (22) பி.ப. 4.00 மணிக்கு புறப்படுமென அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஹார்பர் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

இந்த அதி நவீன ஆய்வுக் கப்பலானது, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அனுமதிக்கு அமைய, கடந்த 2022 ஓகஸ்ட் 16ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்திருந்தது.

குறித்த கப்பல் ஓகஸ்ட் 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய இருந்த நிலையில், இது ஒரு உளவுக் கப்பல் என இந்தியாவினால் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இக்கப்பலின் இலங்கை விஜயத்தை ஒத்திவைக்குமாறு கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி வெளிவிவகார அமைச்சு சீன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கமைய, கடந்த 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவிருந்த யுவான் வாங்-5 என்ற சீன ஆராய்ச்சிக் கப்பலின் வருகையை தாமதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆயினும் குறித்த கப்பல் கடந்த ஓகஸ்ட் 16 – 22 வரை  அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைவதற்கு வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியதையடுத்து குறித்த கப்பல் இலங்கையை வந்தடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.