ஹம்பாந்தோட்டையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் எந்தத் தாமதமும் இன்றி ஆரம்பிக்கப்படும் என்று சீனாவின் சினோபெக் (Sinopec) நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.
வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் விஜித ஹேரத்துடனான சந்திப்பின்போது, சீனாவின் சினோபெக் குழுமத்தின் துணைத் தலைவர் ல்வ் லியாங்கோங் (Lv Lianggong) இதனை உறுதிப்படுத்திள்ளார்.
3.7 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், செயற்பாட்டுக்கு வந்ததன் பின்னர் நாளொன்றில் 2 லட்சம் பீப்பாய்கள் வரை எண்ணெய் உற்பத்தியைத் தரக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அதன் அமுலாக்கத்துடன் தொடர்புடைய தீர்க்கப்படாத சிக்கல்களைப் பற்றி கலந்துரையாட லியாங்கோங் தலைமையிலான 10 பேர் கொண்ட சீன தூதுக் குழு இலங்கை வந்துள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத்தின் ஆதரவு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சவால்களைத் தீர்க்க உதவியதாகவும், இதன் விளைவாகவே திட்ட ஒப்பந்தம் ஜனவரியில் கைச்சாத்திடப்பட்டதாகவும் லியாங்கோங் குறிப்பிட்டார். எஞ்சியுள்ள பிரச்சினைகளை அவர் அமைச்சரிடம் எடுத்துரைத்ததுடன், இரு நாடுகளுக்கும் இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு விரைவான தீர்வை வழங்க அமைச்சர் தலையிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இதன்போது, வெளிநாட்டு முதலீடுகள் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் சாதகமான தாக்கத்தை வலியுறுத்திய அமைச்சர் விஜித ஹேரத், நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தாமதமின்றித் தீர்ப்பதற்குத் தனிப்பட்ட முறையில் தலையிடுவதாக உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகி ன்றது