சீனாவின் நீண்டகால ஒத்துழைப்புப் பங்காளி என்ற ரீதியில், அடுத்த 5 வருடகாலத்தில் சீனா அடையவிருக்கும் வளர்ச்சியானது இலங்கையின் அபிவிருத்திக்கும், சுபீட்சத்துக்கும் அவசியமான வாய்ப்புக்களை வழங்கும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
15ஆவது தடவையாக நடைமுறைப்படுத்தப்படும் ஐந்தாட்டுத் திட்ட அமுலாக்கத்தை அடுத்து ‘புத்தாக்கம் பகிரப்பட்ட அபிவிருத்திக்கு வாய்ப்பளிக்கிறது’ எனும் தலைப்பில் செவ்வாய்க்கிழமை (28) கொழும்பிலுள்ள மரினோ ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே சீனத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
1949ஆம் ஆண்டு மக்கள் சீனக்குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட வேளையில், தனியொரு கார், விமானம், கனரக வாகனத்தைக் கூட சீனாவினால் உற்பத்தி செய்யமுடியவில்லை. அதனைத்தொடர்ந்து 1953 ஆம் ஆண்டு முதன்முதலாக ஐந்தாண்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது சீனாவினால் வடிவமைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட 14 திட்டங்கள் இப்போதும் அமுலில் உள்ளன. அதன்மூலம் விவசாய நாடாகத் திகழ்ந்த சீனா உலகளாவிய ரீதியில் பாரிய கைத்தொழில் உற்பத்தியாளராகவும், பாரிய வர்த்தக நாடாகவும், மிக உயர்ந்தளவு வெளிநாட்டுக்கையிருப்பை வைத்திருக்கும் நாடாகவும், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும் நிலைமாற்றமடைந்தது. அதுமாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் மிக அரிதாகவே எட்டப்பட்டிருக்கும் அடைவுகளான தொடர் பொருளாதார வளர்ச்சி மற்றும் நீண்டகால சமூக ஸ்திரத்தன்மை ஆகிய இரண்டையும் சீனா அடைந்துள்ளது.
சீனப் பொருளாதாரமானது வலுவான அடித்தளம், பல்வகை வாய்ப்புக்கள், மீண்டெழும் தன்மை மற்றும் ஆழமான இயலுமை என்பவற்றைக் கொண்டமைந்திருக்கின்றது. அத்தோடு பல்வேறு உள்ளக மற்றும் வெளியக அச்சுறுத்தல்களையும், சவால்களையும் கையாள்வதற்கான தகைமையும், தன்னம்பிக்கையும் சீனாவிடம் உள்ளன.
சீனாவின் நீண்டகால ஒத்துழைப்புப் பங்காளி என்ற ரீதியில், அடுத்த 5 வருடகாலத்தில் சீன அடையவிருக்கும் வளர்ச்சியானது இலங்கையின் அபிவிருத்திக்கும், சுபீட்சத்துக்கும் அவசியமான வாய்ப்புக்களை வழங்கும். இவ்வருடத்தின் தொடக்கத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் பரஸ்பர அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புசார் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. அதேபோன்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரதமர் ஹரினி அமரசூரிய சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் எமது பரஸ்பர அபிவிருத்தித்திட்டங்கள்சார் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்றத் தயாராக இருக்கின்றோம் என்றார்.



