இலங்கையில் எந்தச்சூழ்நிலையிலும் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா அனுமதிக்காது என்று இலங்கைக்கான சீனத் தூதர் கி சென்ஹாங் தெரிவித்துள்ளார்.
கண்டி, அஸ்கிரியாவில் உள்ள ஸ்ரீ சந்தானந்த பௌத்த கல்லூரியில், அப்பகுதியைச் சேர்ந்த 350 ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை எடுத்துக்காட்டும் வகையில், சீனா இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் மத்திய கிழக்கு மோதலால் உலகின் சில நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால், இலங்கைக்கு எந்த நேரத்திலும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க சீனா தயாராக இருக்கிறது.
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால், சீனாவின் சினோபெக் மூலம் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சீன அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.
மத்திய கிழக்கு மோதலில் தற்போது நிலவும் போர்நிறுத்தம் தொடரும் என்று நம்பிக்கை எமக்குள்ளது. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு நெருக்கடியான நிகழ்வுகளை முகங்கொடுப்பதற்கான தேவைக்களுக்கு ஏற்ப இலங்கைக்கு உதவுவதற்கு சீனா தயாராக இருக்கிறது என்றார்.



