சீனா – ரஸ்யா உறவு அமெரிக்காவின் வியூகங்களின் தோல்வி – பொம்பியோ

சீனாவுக்கும் ரஸ்யாவுக்குமிடையில் ஏற்பட்டுவரும் நெருக்கமான உறவுகள் அமெரிக்காவின் படைத்துறை மற்றும் அரசியல் வியூகங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் தோல்வியாகும் என அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இந்த தோல்வியை மறைப்பதற்கே வெள்ளை மாளிகை இந்த விடயத்தை அடக்கி வாசிக்கின்றது என சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் ரஸ்யாவுக்கான 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட கடந்த புதன்கிழமை (22) பொம்பியோ இந்த கருத்தை அமெரிக்காவின் ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார்.

இந்த பயணத்தின் போது சீனாவும் ரஸ்யாவும் பெருமளவான வர்த்தக உடன்பாடுகளை மேற்கொண்டதுடன், ஐக்கிய நாடுகள் சபையை தலைமையேற்று உலகின் அமைதிக்கு கூட்டாக செயற்படப்போவதாகவும் தெரிவித்திருந்தன.

அமெரிக்க நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து எரிபொருட்களை கொள்வனவு செய்கின்றன. ஆனால் சீன நிறுவனங்கள் 20 விகித கழிவு விலையில் ரஸ்யாவில் இருந்து வாங்குகின்றன. இது அமெரிக்க நிறுவனங்களுக்கு மிகப்பெரும் ஆபத்தாகும் என பொம்பியோ மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் சீனாவினதும், ரஸ்யாவினதும் உறவு கூட்டணி அமைப்பதற்கு ஏற்றதாக தமக்கு தெரியவில்லை என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு சபையின் பேச்சாளார் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.