இலங்கையுடனான நெருங்கிய ஒத்துழைப்பைக் கண்டு துவண்டு போவதை நிறுத்துமாறு அமெரிக்காவுக்கு சீனா பதில்

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கையில் சீனா தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு சீனா பதில் வழங்கியுள்ளது.

இலங்கைக்கான கடன் நிவாரணத்துக்காக சர்வதேச நாணய நிதிய நிபந்தனை விடயத்தில் சீனா காட்டியுள்ள முனைப்பு போதாது என்று நூலன்ட் தெரிவித்திருந்தார்.

எனினும் உண்மையில் அமெரிக்கா இலங்கைக்கு ஏதாவது செய்யவேண்டுமானால், தமது நேர்மையைக் காட்ட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று வியாழன் அன்று வழக்கமான செய்தியாளர் சந்திப்பில், கருத்துரைத்த, சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர்-மாவோ நிங், அமெரிக்க ராஜதந்திரி கூறியதில் உண்மை இல்லை என்று தெரிவித்தார்.

சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி ஏற்கனவே இலங்கைக்கு ஆதரவைத் தெரிவிக்கும் கடிதத்தை வழங்கியுள்ளது. இலங்கையும் அதற்கு சாதகமாக பதிலளித்துள்ளது மற்றும் அதற்காக சீனாவிற்கு நன்றி தெரிவித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் இலங்கையுடனான சீனாவின் நெருங்கிய ஒத்துழைப்பைக் கண்டு துவண்டு போவதை நிறுத்துமாறு வோஷிங்டனை அவர் எச்சரித்தார்.

உண்மையான நண்பன் என்ற வகையில் சீனா இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்களையும் சவால்களையும் உன்னிப்பாகக் கவனித்து அதன் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான உதவிகளை மிகச் சிறந்த முறையில் வழங்கி வருகிறது என்றும் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.