இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பால் சீனாவுக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம்

‘இலங்கையுடனான வெளிநாட்டுக் கடன்மறுசீரமைப்பை மேற்கொண்டதன் காரணமாக 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது’ என்று இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக கலந்துரையாடல் ஒன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘இலங்கையுடன் சீனாவே முதன்முதலாக கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டது’.
‘அந்த வகையில் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு முதலில் இணங்கிய நாடாகவும் சீனா இருக்கின்றது’.
‘ ஆனால் இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் இன்னமும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை’ என்று சீனத்தூதுவர் தெரிவித்துள்ளார்.

‘அதேநேரம், இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பை சீனா மேற்கொண்டதன் மூலமாக 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவின் எக்ஸிம் வங்கி இழந்துள்ளது’ ‘இந்த இழப்பு தொடர்பில் யாரும் பேசுவதில்லை. சீன எக்ஸிம் வங்கி சீனாவின் முக்கியமான ஏற்றுமதி, இறக்குமதி விடயங்களில் பங்காளராக இருக்கின்றது. ஆகவே இத்தகைய பெரும் இழப்பானது எவ்வாறிருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க முடியும்’ என்றும் சீனத்தூதுவர் தெரிவித்துள்ளார்.

‘இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்காக சீனா பெரும் தியாகத்தைச் செய்துள்ளதோடு அதிகளவான பங்களிப்பையும் வழங்கியுள்ளது. ஆனால் அந்த விடயங்களை சீனா பிரசாரம் செய்வதில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயம், இருநாடுகளுக்கும் இடையிலான வரவிலக்கணமாக அமைந்தது’ என்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.