சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்கள் போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட  சிறுவர்கள் தலையில் கறுப்புப் பட்டி அணிந்து    தீபம் ஏற்றி  தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்நிகழ்வு  புதன்கிழமை (01) மாலை  அம்பாறை மாவட்டம்  திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தையின் முன்னால் நடைபெற்றது.

கிழக்கில் அம்பாறை மாவட்டம்  திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக கடந்த சனிக்கிழமை (27) அன்று  ஆரம்பித்திருந்த நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்  புதன்கிழமை  மாலை  ஐந்தாவது நாளில்  நிறைவடைந்திருந்தது.

இதன்போது  அதே இடத்தில்   சிறுவர்கள் ஒன்று கூடி சிறுவர்  தினத்தை முன்னிட்டு  சிறு ஊர்வலத்துடன் தலையில் கறுப்புப் பட்டி அணிந்து  கரிநாளாக அனுஷ்டித்து   தீப்பந்தம் ஏந்தி  எதிர்ப்பை  வெளியிட்டனர்.

இதன் போது கடந்த காலங்களில் காணாமல் சென்ற சிறுவர்களின் நிலைமை குறித்த பல்வேறு கோஷங்களை எழுப்பி இவ்வாறு குறித்த போராட்டத்தில் சிறுவர்கள் இணைந்து கொண்டனர்.