பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசு எதனையும் செய்யவில்லை – சாணக்கியன் சாடுகிறார்.

‘நாட்டில் இன்னும் பொறுப்புக்கூறல் குறித்து கடுமையான கேள்விகள் உள்ளன’ என்று இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  ‘பல கொலைகள் தொடர்பில் கடந்த காலங்களாக நான் தொடர்ச்சியாக பல விசேட அறிவித்தல்களை வழங்கியுள்ளேன்’. ‘ஆனால் இதுவரை அது தொடர்பில் எவ்வித விசாரணைகளும் ஆரம்பிக்கப்படவில்லை’ என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘இவற்றுடன் அரச புலனாய்வுத்துறையினர் தொடர்புபட்டு செயற்பட்டு இருந்ததாக நாம் மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்’. இதேவேளை ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஒருபுறம் கூறப்படுகிறது’. ‘அந்த விசாரணைகள் சரியாக முன்னெமுடுக்கப்படுமாயின் அது எமக்கு மகிழ்ச்சி. ஆனால் இது தொடர்பில் ஒரு நபரிடமேனும் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவில்லை என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

‘அந்தவகையில் பொறுப்புகூறல் விடயத்தில் பாரிய பிரச்சினை காணப்படுகிறது’.
‘உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை கொண்டு வரப்போகின்றீர்களா? காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஏதேனும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றீர்களா? கொலைகள் தொடர்பில் ஏதேனும் விசாரணைகளை முன்னெடுக்கின்றீர்களா? எதுவும் இல்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.