இசைப்பிரியாவை சுட்டிக்காட்டி பாராளுமன்றில் அரசாங்கங்களை சாடிய சாணக்கியன்

‘பொறுப்பு கூறல் விடயத்தில் தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களை போலவே செயற்படுகின்றது’ என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றச்சாட்டினார்.
வெளிவிவகார அமைச்சு தொடர்பான இன்றைய (15) குழுநிலை விவாதத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘புதிய அரசாங்கத்திலும் எந்த மாற்றமும் இல்லை’. ‘சகல அரசாங்கங்களும் அரசை பாதுகாப்பதையே நோக்கமாக கொண்டு செயற்படுகின்றன’ என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அல்ஜஷீராவிற்கு வழங்கிய செவ்வியில் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் முன்வைத்த கருத்துக்களையும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சுட்டிக்காட்டியிருந்தார்.

2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் மருத்துவமனைகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன்போது பலர் கொல்லப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.  அவ்வாறான தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை வெளிப்படுத்திய அவர், இறுதி கட்ட போரில் முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
‘இறுதி கட்ட போரில் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘இவ்வாறான சம்பவங்கள் இருக்கின்ற நிலையில் உள்நாட்டு பொறிமுறை தொடர்பில் மாத்திரமே தற்போதைய அரசாங்கமும் கருத்துரைக்கிறது’. ‘கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் புறக்கணித்த போதிலும் தற்போதைய அரசாங்கத்துக்கு அவர்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்’. ‘வடக்கு மக்களின் முழுமையான ஆதரவு கிடைத்த போதிலும் தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களை போன்றே செயற்படுகின்றது’ என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்

‘எனினும் தமிழ் மக்கள் உள்நாட்டு பொறிமுறையை விரும்பவில்லை’. ‘யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்களில் எந்த விதமான தீர்வும் வழங்கப்படவில்லை’ என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

இதேவேளை, ‘பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கருத்தாடல்கள் தற்போது முன்வைக்கப்படுகின்ற போதிலும் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வதை முகாம்கள் தொடர்பில் எவரும் கருத்துரைப்பதில்லை’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.

‘சுமார் 219 வதை முகாம்கள் நாட்டில் இருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்ற போதிலும் அவை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை’. ‘அவை அனைத்தும் பட்டலந்த சம்பவத்துக்கு பல ஆண்டுகள் பின்னர் இடம்பெற்றுள்ளன’. ‘அத்துடன் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பிலும் தற்போதைய அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது என தங்களுக்கு நன்கு தெரியும்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

இதேவேளை, தொடர்ந்து அநுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம் தொடர்பில் கருத்துரைத்த அவர், ‘யுத்த காலத்தில் வடக்கு கிழக்கில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றும் வலியுறுத்தினார்.
‘அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவத்துக்கு எதிராகவே விசாரணை நடத்தப்பட வேண்டும்’. எனினும் தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களை போன்றே செயற்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

‘ஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர்’.
‘அதற்கு ஒரு உதாரணமாக இசைப்பிரியாவை பற்றி கூறமுடியும்’. ‘அவர் உயிருடன் இருந்தமைக்கான பல ஆதாரங்கள் காணப்படுகின்றன’. ஆனால் இறுதியாக அவர் சடலமாகவே மீட்கப்பட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.