இலங்கை தொடர்பில் சர்வதேச தரத்திலான விசாரணைகளுக்கு மையக் குழு அழைப்பு

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச தரத்திலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மையக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன. கனடா, மலாவி, மொன்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியாவுடன் இணைந்து மையக் குழுவின் இலங்கை தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் உரிமைகள் பேரவையின் பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி குமார் ஐயர் முன்வைத்துள்ளார்.

நீடித்த சவால்கள் மற்றும் சீர்திருத்தத்திற்கான வாய்ப்புகள் ஆகிய இரண்டையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வொல்கர் ரெக் (Volker Turk) அடிக்கோடிட்டுக் காட்டியமைக்கு இதன்போது குமார் ஐயர் தனது நன்றியைப் பகிர்ந்துள்ளார்.

சட்டவிரோதக் கொலைகள், கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல், பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறைகள், தன்னிச்சையான தடுப்புக்காவல்கள் உள்ளிட்ட அனைத்து விதமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மனித உரிமைகள் பேரவை ஏற்கனவே ஆவணப்படுத்தியுள்ளமை தொடர்பிலும் அவர் இதன்போது நினைவு படுத்தியுள்ளார்.

கடந்த காலத்திலிருந்து விடுபட்டு, பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைத் தொடர்ந்து பாதிக்கும் ஆழமான வடுக்களைக் குணப்படுத்த இலங்கைக்கு ஒரு வாய்ப்பு காணப்படுவதாகவும் குமார் ஐயர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார். மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகியவற்றில் அதன் உறுதிமொழிகளை அர்த்தமுள்ள நடவடிக்கைகளாக மாற்றுமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு நீதித்துறை செயல்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கு, குற்றவாளிகள் நீண்டகாலத் தண்டனையிலிருந்து விடுபடாமல் இருப்பது அவசியம் என்றும் குமார் ஐயர் வலியுறுத்தியுள்ளார்.

முழுமையான சுதந்திரமான மற்றும் பயனுள்ள பொது வழக்கு தொடுநர் அமைப்பை அவர் ஆதரித்துள்ளார்.
அத்துடன், ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுவதும் மிக முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கையுடன் ஆக்கபூர்வமாக பணியாற்றத் தயாராக உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளுக்கான பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி குமார் ஐயர் சுட்டிக்காட்டியுள்ளார்.