ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 7.75 சதவீதமாக குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கிதீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற நாணய சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண வீக்க இலக்கை 5 சதவீதமாக கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான அபிவிருத்திகளை கருத்திற்கொண்டு நாணய சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் முதல் பணவாட்ட நிலைமைகள் குறையத் தொடங்கியுள்ளன. முன்னர் எதிர்பார்த்ததை விடவும் குறுகிய காலத்தில் பணவீக்கம் படிப்படியாக அதிகரிக்கும் அறிகுறிகளை காண்பித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் ஆரம்பத்தில் பணவீக்கம் நேர்மறையாக மாறும் என்றும் அதன்பிறகு படிப்படியாக இலக்குடன் ஒத்துப்போகும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக மத்திய தெரிவித்துள்ளது.



