வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  மனுதாரர் சார்பில் வழக்கை தொடரமுடியாது போனமையால், வழக்கை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவில் சமூக செயற்பாட்டாளர் நாகானந்த கொடிதுவக்கு மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்ன ஆகியோர் இந்த எழுத்தாணை மனுவை 2018ஆம் ஆண்டு தாக்கல் செய்திருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட சிலர், வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, இந்த வழக்கு தகுதியற்றது என்றும், சட்டப்பூர்வ காரணங்களை விட ஊடக விளம்பரத்திற்காகவே முதன்மையாக தொடரப்பட்டது என்றும் வாதிட்டார்.

மனுதாரர் வழக்கை தொடர்ந்து முன்னெடுக்கத் தவறியதால், மனுவை தள்ளுபடி செய்யுமாறு அவர் நீதிமன்றத்தைக் கோரினார். இந்த நிலையில் குறித்த சமர்ப்பணத்திற்கு உடன்பட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த எழுத்தாணை மனுவை தள்ளுபடி செய்தது.