இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தைக் கண்காணிக்க விசேட அறிக்கையாளரை நியமிக்க கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் உலகநாடுகளின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான விவாதத்தின்போது கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகத்தின் சார்பில் இலங்கையின் சமகால நிலைவரம் குறித்து உரையாற்றிய ஹரினி சிவலிங்கம், இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தைக் கண்காணிக்கவும், அறிக்கை சமர்ப்பிக்கவும், நீதி மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை நோக்கிய அளவிடக்கூடிய முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கும் வலுவான அதிகாரங்களைக்கொண்ட பிரத்யேக விசேட அறிக்கையாளர் ஒருவரை நியமிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தியுள்ளார்.



