இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படுவதில் நிலவும் தாமதம் குறித்து கனடா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது, இந்த அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவின் இந்த நிலைப்பாட்டுக்கு பதிலளித்துள்ள அமைச்சர், இந்தத் தாமதம் அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். மாறாக, சட்ட ரீதியான சிக்கல்கள், தொழில்நுட்பத் தடைகள் மற்றும் எல்லை நிர்ணயப் பிரச்சினைகளே இதற்குக் காரணம் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வாக மாகாண சபை முறையை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கீகரித்துள்ளதாக அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், கனடாவின் “Pathways to Peace” திட்டத்தின் கீழ் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும், இரு மொழிகளை இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொள்வதை ஊக்குவிக்கவும் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை மாணவர்கள் கனடாவில் உயர்கல்வியைத் தொடர மேலதிக வாய்ப்புகளை வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. புத்தளம், மன்னார் மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் கனடா முன்வந்துள்ளது.



