சூழ்நிலைக் கைதியாகவுள்ள ரணில் விக்கிரமசிங்கவினால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?-பேராசிரியர் எஸ்.ரகுராம்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக நீண்டகாலமாக காலிமுகத் திடலில் இடம்பெற்றுவந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த 9 ஆம் திகதி அவர்கள் நடத்திய போராட்டம் பிசுபிசுத்துப்போய்விட்டது. இந்த நிலையில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீவிரப்படுத்தியிருக்கின்றார்.

தமிழ்க் கட்சிகள் இதில் இணையப்போவதில்லை எனவும் ஆனால் ஆதரவளிக்கத் தயார் எனவும் அறிவித்துள்ளன. இந்த நகர்வுகள் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறைத் தலைவரான பேராசிரியர் எஸ்.ரகுராம் லண்டன் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகர்களுக்காக தருகின்றோம்.

கேள்வி:

தொடர்ச்சியாக மூன்று ஒன்பதாம் திகதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் வெற்றிபெற்றதைப் போல ஓகஸ்ட் 9 இல் நடத்தப்பட்ட போராட்டம் வெற்றிபெறவில்லை. இதற்கு காரணம் என்ன?

பதில்:

அரசாங்கம் இந்தப் பிரச்சினையை அணுகிய விதம் இதற்கு முக்கிய காரணம். இந்தப்போராட்டத்துக்கு காரணமாக இருந்திருக்கக்கூடிய உடனடிப் பிரச்சினைகளை ஓரளவுக்காவது தீர்க்கக்கூடிய சில வழிமுறைகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. இந்த ‘கோட்டா கோ கம” போராட்டமானது சிங்கள மக்களின் அன்றாட பிரச்சினைகளிலிருந்துதான் எழுந்தது. ஒரு முற்றுமுழுதான அரசியல் மாற்றத்தை அவர்கள் எதிர்பார்ப்பதாக பின்னர் கூறிக்கொண்டாலும் கூட, உண்மையில் அதற்கான அடித்தளம் இடப்பட்டிருக்கவில்லை. அவர்களுடைய போராட்டத்தின் தொடக்கம் என்பது அவர்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய நாளாந்த அடிப்படைத் தேவைகள் ஒழுங்காக முறையாக வழங்கப்படாதநிலையில், அவற்றுக்கான தட்டுப்பாடுகள், விலை உயர்வுகள் அவர்களுடைய வாழ்க்கையை அசைத்தபோதுதான் அவர்கள் வீதிக்கு இறங்கத் தள்ளப்பட்டனர்.

இந்தப் போராட்டமானது ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் – நீண்டகாலத்துக்கு கொண்டு செல்லக்கூடியதாக அமைந்திருக்கவில்லை. அதிலும் முக்கியமாக போராட்டம் ஆரம்பமானபோது ஆட்சியிலிருந்த ராஜபக்சக்களை வீட்டுக்கு அனுப்புவது என்பதுதான் அவர்களுடைய பிரதான இலக்காக இருந்தது.

இதேவேளையில் தமிழத் தரப்பினர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்கள். அதாவது இந்தப் பிரச்சினையின் அடிப்படைகளை அறிந்துகொள்ள முற்படாமல் வெறுமனே வெளித் தெரியும் காரணிகளை மட்டும் கனத்திற்கொண்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் இதனால் தமிழ் மக்கள் இந்தப் போராட்டத்தில் உள்வாங்கப்படும் தன்மை நீர்த்துப்போயிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்கள். தமிழ் மக்களையும் உள்வாங்கக்கூடியதாக அவர்களுடைய கோரிக்கைகள் இருக்கவில்லை என்பதும் குற்றச்சாட்டாக இருந்தது.

இதனைவிட முன்னைய ஒன்பதாம் திகதியை அண்மித்த காலப்பகுதியில் காணப்பட்ட நிலைமை போல ஓகஸ்ட் ஒன்பதாம் திகதிய அண்மித்த காலப்பகுதியில் காணப்படவில்லை. புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது அவரது அதிகாரிகளோ விநியோகச் சங்கிலிகளை முன்னேற்றகரமாக நகர்த்தியிருந்தார்கள். சிங்கள மக்கள் மத்தியில் காணப்பட்ட அந்த ஆக்ரோசம் இதனால் சற்று தணிவடைந்திருந்தது.

இந்தப் போராட்டம் பலமான ஒரு அடித்தளத்தைக்கொண்டிருக்கவில்லை என்பது இப்போது வெளித் தெரிய ஆரம்பித்துள்ளது. ஓகஸ்ட் 9 ஆம் திகதிப் போராட்டம் மக்கள் மத்தியில் ஒரு அலையை ஏற்படுத்தாமைக்கு இந்த விநியோக சங்கிலி ஓரளவுக்கு செயற்படத் தொடங்கியிருப்பதும் – ஒரு நீண்டகாலப் போராட்டத்துக்கான அடித்தளம் இடப்படாமையும், இந்தப் போராட்டத்தை நாடளாவிய ரீதியில் சிறுபான்மை இனங்களுடன் இணைந்து முன்னெடுக்கக்டிய வெளி உருவாக்கப்பட்டிருக்கவில்லை என்பதும், இந்தப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்கள் கண்டறியப்பட்டு, அவை பகிரங்கமாக ஏற்கப்பட்டு அவை சார்ந்த வழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படவில்லை என்பதும் ஓகஸ்ட் 9 ஆம் திகதி மக்கள் அதிகமாகத் திரளாமைக்கான பிரதான காரணமாக அமைந்தது. காலிமுகத் திடலிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறிச் சென்றிருப்பதும் இதனைத்தான் உறுதிப்படுத்துகின்றது.

கேள்வி:

அரசியல் தலைமையில் இந்தப் போராட்டம் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியிருப்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. ஆனால், அரசியல் முறைமையில் இந்தப் போராட்டம் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கக்கூடிய நிலை உள்ளதா?

பதில்:

அரசியல் தலைமையில் ஏற்பட்ட மாற்றம் கூட ஒரு நேரடி அழுத்தத்தினால் ஏற்பட்டது. அது ஒரு கோட்டபாட்டு ரீதியான மாற்றமா என்றுகூட சொல்லமுடியுமா என்ற கேள்வியும் இருக்கின்றது. ராஜபக்சக்களை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கு அங்கு வலுவாக முன்வைக்கப்பட்டது. அதற்கு பின்புலமாக இருந்தது மக்களுடைய எழுச்சி. இதற்கு பல்வேறு அரசியல் பின்னணிகளும், சர்வதேச அரசியல் பின்புலங்களும் இருப்பதை நாம் அவதானிக்கலாம். இவை அனைத்தும் ஒரே புள்ளியில் சந்திக்கும் நிலையில்தான் ராஜபக்ச அரசாங்கம் அகற்றப்படக்கூடியதாக இருந்தது.

புத்திஜீவிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்தை உடனடியாகக் கொண்டுவரக்கூடியதாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. சில முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அவற்றைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பாராளுமன்றம் தொடர்ந்தும் ராஜபக்சக்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஒரு சூழ்நிலைக்கைதியாகத்தான் தொடர்ந்தும் இருக்கின்றார். இந்த நிலையில் அவர் எதிர்பார்க்கின்ற வகையில் மாற்றங்களைக் கொண்டுவருவது – குறிப்பாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிப் பதவியை மாற்றுவது, பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை வங்குவது போன்றவற்றை தன்னுடைய விருப்ப்படி செய்யக்கூடியவராக அவர் இல்லை. அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கின்ற அமைச்சர்களை நீங்கள் பார்த்தால் கூட பாரியளவிலான மாற்றங்களைக் காணமுடியவில்லை. மீண்டும் மீண்டும் அதே முகங்கள் – வெவ்வேறு அமைச்சுக்களுக்குள் இடம்பெறும் நிலை காணப்படுகின்றது. அதனால் முறைமையை மாற்றுவது என்பது எந்தளவுக்கு சாத்தியமானதாக இருக்கும் என்ற கேள்வி உள்ளது. அதாவது பாராளுமன்றம் ராஜபக்சக்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இந்த முறைமையில் மாற்றம் என்பது நிகழுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க ஓரளவுக்கு மேல் அதிகாரங்களைப் பெறுவதோ அல்லது, மக்களுடைய அபிமானத்தைப் பெறுவதே ராஜபக்ச குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியைக்கொடுக்கும் என நான் நினைக்கவில்லை. இந்த இடத்தில் ஒரு சூழ்நிலைக் கைதியாக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்கவின் மூலமாக நாம் எதிர்பார்க்கின்ற அரசியலமைப்பு சீர்திருத்தம் எவ்வளவு தூரம் முன்கொண்டுசெல்லப்படும் என்பதை நாம் மிகக்குறுகிய காலத்தில் எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கும்.

கேள்வி:

சிறுபான்மையின மக்களுடைய பிரச்சினைகள் குறித்த பெரும்பான்மையின மக்களுடைய அணுகுமுறையில் இந்தப்போராட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கமுடியுமா?

பதில்:

போராட்டக்காரர்கள் மத்தியில் தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் சிலர் இடம்பெற்றிருந்தமையினாலும், இந்தப் போராட்டத்தை தனித்து சிங்கள மக்களுடைய போராட்டமாக முன்வைக்காது அனைத்து இலங்கையர்களின் போராட்டமாக முன்வைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளையும் அவர்கள் கையில் எடுக்கின்றார்கள் என்ற தோற்றப்பாடு உருவாகியிருந்தது. அதுவும் அவ்வப்போது. ஆனால், அவற்றை முக்கியமானவையாகக் கருதி அவற்றை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

இருந்தபோதிலும், முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களில் கணிசமான தொகையினர் இந்தப் போராட்டத்தில் தம்மையும் இணைத்திருந்தனர். கோட்டாபய அரசாங்கம் முஸ்லிம்கள் தொடர்பில் கடைப்பிடித்த கொள்கை இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை உற்றுக்கவனிக்கும் போது, தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகள், அதிகாரப் பரவலாக்கல் மற்றும் போரால் ஏற்பட்டிருக்கக்கூடிய விளைவுகள், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை என்பன தொடர்பாக அவ்வப்போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டனவே தவிர, அவற்றை ஒரு முக்கியமான கோரிக்கையாக சிங்கள மக்கள் அணுகத் தொடங்கியிருக்கின்றார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவில்லை. அதாவது தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆழமான ஒரு புரிதலை இந்தப் போராட்டம் ஏற்படுத்தியிருக்கவில்லை.