அரசியலமைப்பைப் பயன்படுத்தி தோ்தல்கள் பிற்போடப்படுமா? அரச உயா் மட்டம் ஆராய்வதாகத் தகவல்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் பிற்போடப்படும் ஆபத்து தொடர்கின்றது என கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும் என உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதியின் பதவிக்காலத்தையும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தையும் நீடிப்பதற்காக அரசாங்கம் அரசமைப்பில் உள்ள ஏற்பாடுகளை பயன்படுத்த முயலும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

சில வாரங்களிற்கு முன்னர் இரண்டு தேர்தல்களையும் பிற்போடவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் எதிர்கட்சிகளிடமிருந்தும் கடும் விமா்சனங்கள் முன்வை்கப்பட்டன.

இதனை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் அவசர அவசரமாக தேர்தல்கள் உரிய காலத்தில் இடம்பெறும் என தெரிவித்தனர். எனினும் ரங்கபண்டார திடீர் என தேர்தல்களை பிற்போடுவது குறித்த கருத்தை வெளியிடவில்லை என அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் காணப்படுகின்றது.

தேர்தல்களை பிற்போடுவது குறித்த மக்களின் மனோநிலையை அறிந்துகொள்வதற்காகவே பாலித ரங்க பண்டார அவ்வாறான கருத்தினை வெளியிட்டார் என அரசியல்வட்டாரங்கள் கருதுகின்றன. தனது பதவிக்காலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நீடிப்பது குறித்து ஜனாதிபதி சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவரா என்பது குறித்த கரிசனை அரசியல் வட்டாரங்களில் காணப்படுகின்றது.

சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் மக்களின் கருத்துக்களை அறியாமலே நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டதை அரசியல் சுட்டிக்காட்டுகின்றன. ஆறுவருடகாலத்திற்கு மேல் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பது என்றால் மாத்திரமே சர்வஜனவாக்கெடுப்பு அவசியம், தற்போதைய ஐந்து வருட காலத்தை மேலும் ஒருவருடத்திற்கு நீடிப்பதற்கு சர்வஜனவாக்கெடுப்பு அவசியமில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.

தேர்தல்களை பிற்போடுவதற்காக அரசமைப்பின் இந்த ஏற்பாடுகளை பயன்படுத்துவதற்கு முயலக்கூடும் என பெயர் குறிப்பிடவிரும்பாத அரசியல் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.