இலங்கையை சர்வதேச இனப்படுகொலை விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம் ஒன்றை, சுவிட்சர்லாந்தின் சமூக ஜனநாயகக் கட்சி, ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.
அண்மையில் லூசெர்ன் (Lucerne) மாகாணத்தில் இடம்பெற்ற கட்சியின் மாநாட்டில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள், படுகொலைகள் மற்றும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை இந்த தீர்மானம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அத்துடன், ஐக்கிய நாடுகளின் இனப்படுகொலை மாநாட்டின் கீழ் குற்றங்கள் இனப்படுகொலைக்குத் தகுதியானதா? என்பதை சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து சுவிஸ் அரசாங்கம் ஆராய வேண்டும் என்றும் தீர்மானம் கோருகிறது.
இலங்கை தொடர்பில் தெளிவான மனித உரிமைகள் சார்ந்த சுவிஸ் வெளியுறவுக் கொள்கை, தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களைப் பாதுகாத்தல், அத்துடன் சுவிட்சர்லாந்தில் உள்ள புலம்பெயர் தமிழர்களுடன் ஒத்துழைத்தல் என்பவற்றையும் தீர்மானம் கோரியுள்ளது.
கட்சி மாநாட்டின் போது, சுவிட்சர்லாந்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த மூன்று சுவிஸ்-தமிழ் அரசியல்வாதிகள் இந்த தீர்மானத்தை முன்வைத்தனர். கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டம், நடைமுறையில் உள்ளதுடன் தண்டனையிலிருந்து விடுபடும் கலாசாரம் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் அவலங்களும் இந்த மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.



