தேசிய பாதுகாப்பு சபையை ஸ்தாபிக்கும் சட்டமூலம் தயாரிக்க அமைச்சரவை அனுமதி

தேசிய பாதுகாப்பு சபை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையின் தேசிய பாதுகாப்பு சபையானது 1999ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்கும், அதனுடன் தொடர்புடைய உள்ளூர், சர்வதேச, பொருளாதார மற்றும் இராணுவக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை மேற்கொள்கின்ற அடிப்படை நிறைவேற்று நிறுவனமாகவும் இயங்குகின்றது.

கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் தேசிய பாதுகாப்பு சபை நியதிச்சட்ட முறையுடனும், தெளிவான கட்டமைப்புடனும் கூடியதாக ஸ்தாபிக்க வேண்டிய தேவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தேசிய பாதுகாப்பு சபை நாடாளுமன்ற சட்டத்தின் பிரகாரம் சட்டபூர்வமாக்குவதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.