பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கையில் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து ஜெனீவாவில் பிரிட்டன் கவலை

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் இலங்கையில் பயன்படுத்துவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்த  நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.

கருத்துசுதந்திரம் ஓன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை அவை வலியுறுத்தியுள்ளன. பிரிட்டனின் மனித உரிமைக்கான இராஜதந்திரி  ரிட்டா பிரென்ஞ் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நிலங்களை விடுவித்தல் நீண்டகால தடுத்துவைப்பு மற்றும் ஊழல் ஆகியவை குறித்த கரிசனைகளிற்கு தீர்வை காண்பதற்காக இலங்கையின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை வரவேற்கின்றோம் இலங்கையின் அனைத்து இன மற்றும் மத சமூகத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அடிப்படையாக அமையலாம்.

தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து நாங்கள்  கரிசனை கொண்டுள்ளோம் பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதற்கு தற்போது நடவடிக்கைகள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்கின்றோம்,பயங்கரவாத சட்டம் சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப காணப்படவேண்டும் என இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

கருத்துசுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். நல்லிணக்கத்திற்கான தனது அர்ப்பணிப்பை நோக்கி இலங்கை தனது முதல்கட்ட நடவடிக்கையை எடுக்கின்ற நிலையில் வெளிப்படைத்தன்மை பொறுப்புக்கூறல் அனைவரையும் உள்வாங்கல் போன்றவற்றின் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

நாட்டின் தேர்தல் முறைகள் மீதான மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து தக்கவைப்பதன் மூலம் அதன் ஸ்தாபனங்கள் ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை பேணுவதன் மூலம் இலங்கை தனது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை பேணுவது அவசியம் எனவும்  அவை தெரிவித்துள்ளன.