உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யார் என்பதை இன்று நாட்டு மக்கள் அறிந்துக்கொள்ளபோவதாக பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இன்று (31) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யார் என்பதை நாட்டுக்குத் தெரியப்படுத்துவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் அவர் தயாரித்துள்ள புத்தகத்தை வெளியிடும் நிகழ்வு கொழும்பில் இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.
தற்போதைய அரசாங்கம் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியின் பெயரை வெளியிடவில்லை என்றும், ஒன்றரை வருடக் கடினமான ஆய்வுக்குப் பிறகு, ‘ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியைத் தேடுதல்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூலை தாம் தயாரித்துள்ளதாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கைகளில் 2 அறிக்கைகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மறைத்துள்ளதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
அத்துடன் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும் அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை என்றும் உதயகம்மன்பில குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டை இராணுவத்தினர் மீது சுமத்த முயற்சிப்பதாக உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
கடந்த கால யுத்தத்தில் தோல்வியுற்ற பிரிவினைவாத தரப்பினரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தற்போதைய அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
யுத்தத்தில் தோல்வியுற்ற தரப்பினர் இலங்கை இராணுவம் தமிழ் மக்களை கொலை செய்து இனப்படுகொலை செய்ததாக ஆரம்பத்தில் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்தப் பின்னணியில் நாட்டின் அரசாங்கத்தின் ஊடாகவே மீண்டும் அவ்வாறானதொரு குற்றச்சாட்டை முன்வைக்க திட்டம் தீட்டப்படுவதாக உதயகம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.



