கொழும்பில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டட ஊடகவியலாளர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இதுவரை முழுமையான நீதியினை பெற்றுத் தர முடியாத நிலை தொடரும் பின்னணியில், சுதந்திர ஊடக இயக்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (19) இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் (SLPI) கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

‘இருளை போக்கக்கூடிய வழி’ (අඳුර දුරු කළ හැකි මඟ) என்ற கருப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதில் ஊடக அமைப்புகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில், படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுகூரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் பேராசிரியர் சாவித்ரி குணசேகர, மூத்த ஊடகவியலாளர் விஜயானந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும ஆகியோர் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்தனர்.

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

மேலும், சுனில் ஜயசேகர, ஹனா இப்ராஹீம் மற்றும் ஆர். ராம்குமார் ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றியதுடன், ஊடக சுதந்திரத்தின் அவசியத்தையும், ஊடகவியலாளர்களுக்கு நீதியினை உறுதிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.