மட்டக்களப்பு புதுக்குடியிருப்புப் படுகொலை: 35ஆவது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு – புதுக்குடியிருப்புப் படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவுதினம்  பொதுமக்களால்  நினைவு கூரப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ் கிராமமான புதுக்குடியிருப்பு கிராமத்தில் 1990ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி இந்தப் படுகொலை நடந்தேறியது.

சம்பவதின இரவு புதுக்குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்த இராணுவமும், இராணுவத்துடன் இணைந்த ஊர்காவல் படையும் வீடுகளின் உறங்கிக் கொண்டிருந்த தமிழ்மக்கள் 45 பேரை தூக்கத்திலிருந்து எழுப்பி விசாரணைக்கென கடற்கரைப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வைத்து பெண்கள், குழந்தைகள் உட்பட 17 தமிழர்களை கூரிய ஆயுதங்களால் வெட்டியும், குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தனர். 9 ஆண்களும், 8 பெண்களும் கொல்லப்பட்டனர். பலர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

நினைவேந்தல் நிகழ்வு கடற்கரை வீதியில் உள்ள நினைவுத் தூபியில் நடைபெற்றது. கொல்லப்பட்டவர்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 35 ஆண்டுகள் கடந்துள்ள போதும் கொல்லப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.