டிட்வா சூறாவளி குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுக்கத் தவறியமைக்காக அரசாங்கத்திற்கு எதிராகக் கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளது.
“டிட்வா” சூறாவளியின் ஆபத்துகள் குறித்து முன்கூட்டியே பொதுமக்களுக்குத் தெரிவிக்கத் தவறியமை மற்றும் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமை ஆகியவற்றுக்காக ஜனவரி 15ஆம் திகதிக்குள் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
பல அரச நிறுவனங்களும் அதிகாரிகளும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டதால் பெரும் உயிர்ச் சேதங்களும் சொத்துச் சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் அழைப்பாளர் சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த அலட்சியப்போக்கு பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக இந்த மனுவில் வாதிடப்படவுள்ளது. 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் தண்டிக்கப்பட்டமை இந்த வழக்கிற்கு முன்னுதாரணமாகக் கொள்ளப்படும்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தூரநோக்கற்ற ஆட்சியால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளும் ஆதாரங்களாக முன்வைக்கப்படவுள்ளன.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உறவினர், ஒரு மதத் தலைவர் மற்றும் ஒரு தொழிலதிபர் ஆகியோர் சாட்சிகளாகப் பெயரிடப்பட உள்ளனர்.
ஜனாதிபதியின் செயலாளர், வளிமண்டளவியல் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களங்களின் பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்படவுள்ளனர்.
இந்த மனு தற்போது தயாராக இருப்பதாகவும், ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னதாக இது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



