புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்- ரணில்

285 Views

தமிழ் அமைப்புகள் மீதான தடை

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமானால் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து மட்டுமல்ல ஐரோப்பிய அரசுகள்கூட இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது,

சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எமது ஆட்சியிலும் தடை விதிக்கப் பட்டிருந்தது. ஆனால் இந்த ஆட்சி வந்த பிறகு பல அமைப்புகள் தடை செய்யப்பட்டன. எம்முடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அமைப்புகளும் தடைபட்டியலில் இணைக்கப்பட்டன. அவைமீதான தடையை நீக்குமாறுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த கோரிக்கை நியாயமானது.

எமது ஆட்சியில் வேலை வாய்ப்பு இருந்தது, வருமானம் இருந்தது, உண்பதற்கு உணவு இருந்தது, ஆனால் தேசிய வாதம் பற்றி கதைத்தனர், நாட்டை மீட்போம் என சூளுரைத்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி கதைத்தனர். இறுதியில் தற்போது என்ன நடந்துள்ளது? இனவாதத்தை உண்ண முடியுமா? இனவாதத்தால் ஒரு லீற்றர் டீசல் வழங்க முடியுமா?

எனவே, இவ்வாறான அரசியலை விட்டுவிடுவோம். தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைக்கு தீர்வை வழங்குவோம். தேரர்களும் இதனை வலியுறுத்துகின்றனர். புலம்பெயர் அமைப்புகளின் முதலீடு வந்தால் நல்லதுதான். குறிப்பாக இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்ற நிலைப்பாட்டை நாம் எடுத்தால் புலம்பெயர் தமிழர்களை விடவும் அதிக வெளிநாட்டு முதலீடுகள் வரும். ஐரோப்பிய அரசுகள்கூட முதலீடுகளை மேற்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply