தடுப்பு முகாமிலிருந்து விடுவித்தவர்களை மீண்டும் சிறைப்படுத்தும் அவுஸ்திரேலியா

கடந்த 2022ம் ஆண்டின் இறுதியில், அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட 100க்கும் அதிகமான நபர்களை மீண்டும் சிறைப்படுத்தும் அவுஸ்திரேலிய தொழிற்கட்சி அரசாங்கத்தின் முடிவு ‘கொடூரமானது’ என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விமர்சித்துள்ளனர். 

பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுவிப்பதை தடுக்கும் நோக்கத்தில் அரசாங்கம் செயல்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் தரப்பிலிருந்து அவுஸ்திரேலிய மேலவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், குடிவரவுத் தடுப்பிலிருந்து விடுவித்தவர்களை மீண்டும் சிறைப்படுத்துவதற்கான ஒரு மசோதாவை நிறைவேற்ற அவுஸ்திரேலிய அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

இதில் மோசடி அல்லது வாகனம் ஓட்டுதல் போன்றவற்றில் வன்முறையற்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் கூட உள்ளடக்கப்படுவதாகக் கூறியிருக்கின்றனர் இந்த மசோதாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் வழக்கறிஞர்கள்.

செல்லாத முடிவுகளால் விசாக்களை இரத்து செய்து விடுவித்தவர்களை மீண்டும் சிறைப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடுவதாகவும் அது அரசியலமைப்பின் படி சரியா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் கூறியிருக்கிறார் வழக்கறிஞர் ஜியா ஜரிபி.

“சுமார் 100 பேரை விடுவித்து மீண்டும் அடுத்த சில வாரங்களில் அவர்களை சிறைப்படுத்துவது மிகவும் கொடூரமானதாகும். அது சம்பந்தப்பட்ட நபர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாழாக்கிவிடும்,” எனக் கூறியிருக்கிறார் தஞ்சக்கோரிக்கையாளர் வள மையத்தின் தலைமை வழக்கறிஞர் ஹன்னா டிக்கின்சன் கூறியிருக்கிறார்.