இலங்கை கடல்பகுதியில் நிகழும் ஆட்கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றங்களை தடுக்கும் விதமாக இலங்கை கடலோர காவல்படைக்கு 12 கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் இதர உபகரணங்களை அவுஸ்திரேலிய எல்லைப்படை அண்மையில் வழங்கியிருக்கிறது.
இது கடலோர கண்காணிப்பு நடவடிக்கையினை மேலும் அதிகரிப்பதற்கு துணையாக இருக்கும் என இலங்கை கடலோர காவல்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தல், பிற நாடுகடந்த குற்றங்களை தடுப்பதில் அவுஸ்திரேலிய எல்லைப்படையின் முக்கிய கூட்டாளியாக இலங்கை இருந்து வருவதாக இலங்கை கடலோர காவல்படை கூறியுள்ளது.
இலங்கையின் தெற்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் Kirinda எனும் பகுதியில் உள்ள இலங்கை கடலோர காவல்படையின் பயிற்சி மையத்தில் ட்ரோன்களை இயக்குவதற்கான பயிற்சியை அவுஸ்திரேலிய எல்லைப்படையின் அதிகாரிகள் வழங்கியிருக்கின்றனர்.
கடந்த ஜூன் 2022ல் இலங்கையைப் பார்வையிட்ட அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ஓ’நீல்,“அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வராதீர்கள்! நீங்கள் அவுஸ்திரேலியாவுக்குள் வந்தடைய முடியாது. மீறி வந்தால் இடைமறிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவீர்கள்,” என இலங்கையர்களை எச்சரித்திருந்தார். அத்துடன் அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோரும் இலங்கை மக்களை தடுக்கும் விதமாக இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4,200 ஜி.பி.எஸ் கருவிகளை வழங்குவதாக அவுஸ்திரேலியா அப்போது அறிவித்தது.