அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கலைக்கூடத்தின் சுல்மான் பரிசுக்கான இறுதிப் போட்டியாளராக குர்து அகதி முஸ்தபா அசிமிடாபர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் மனுஸ்தீவில் செயல்பட்ட அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பில் 7 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்தவர்.
கடந்த பிப்ரவரி மாதம், அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் பல அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு விசா வழங்கிய போதும் மேலும் ஆயிரக்கணக்கான அகதிகள் தொடர்ந்து தற்காலிக விசாக்களில் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறான அகதிகளில் குர்து அகதியான முஸ்தபாவும் ஒருவராக இருக்கிறார்.
விசா பரிசீலனைக்காக காத்திருந்த 31 ஆயிரம் அகதிகளில் 19 ஆயிரம் அகதிகளுக்கு மட்டுமே நிரந்தர பாதுகாப்பு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் இந்த தன்னிச்சையான முடிவு, குடிவரவு அமைப்புமுறையில் உள்ள இரக்கமற்ற போக்கை எடுத்துக்காட்டுவதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
“நான் 2023 சுல்மான் பரிசின் இறுதிப் போட்டியாளராக உள்ளேன். ஆர்சிபால்ட் பரிசுக்கான ஓவியத்தில் மையக்கருவாக இருந்துள்ளேன். எனது கதை சுய உருவ ஓவியத்தின் மூலம் உலகெங்கும் சென்று சேர்ந்துள்ளது, குர்திஸ்தானில் உள்ள எனது தந்தை கூட அதை கண்டிருக்கிறார். இனவெறி, தவறான அரசியலுக்கு எதிராக இந்த நுட்பத்தை நான் பயன்படுத்துகிறேன்,” என குர்து அகதியான முஸ்தபா கூறியிருக்கிறார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள 19 ஆயிரம் அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு விசாவை தொழிற்கட்சி வழங்கியுள்ளது என்றும் ஆனால் தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி வழங்கியது போல தற்காலிக விசாக்களுக்கு முடிவுக் கட்டவில்லை என்றும் அகதிகள் நல செயல்பாட்டாளரான ஐன் ரிண்டோல் தெரிவித்திருக்கிறார். இதனால் நிரந்தர பாதுகாப்பின்றி தொடர்ந்து 12 ஆயிரம் அகதிகள் தற்காலிக விசாக்களில் உள்ளனர்.