பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கண்டித்தும், எரிபொருட்களின் விலையேற்றம், மற்றும் மக்களின் உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்வது உட்பட பல்வேறு விடயங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியினரால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்த போது,

“கோட்டாபாய, மகிந்த தலைமையிலான அரசாங்கம் மக்கள் விரோத செயற் பாடுகளை தொடர்ந்து கொண்டிருப்பதனை அண்மை காலங்களாக அவதானிக்க முடிந்துள்ளது.

IMG 8744 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

குறிப்பாக உணவுப் பொருட்கள் மற்றும், எரிபொருள் ஆகியவற்றின் சடுதியான விலை அதிகரிப்பானது நாட்டு மக்களை, குறிப்பாக உழைக்கும் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. மக்களின் நலனை முன்னிறுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் மக்கள் மீது சுமைகளையும், துன்பங்களையும் ஏற்படுத்திய நிலையில், மக்கள் வீதியிலே இறங்கி போராட வேண்டிய நிலமைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டின் சொத்துக்களையும் இறைமையும் தாரை வார்க்கும் அரசின் செயற்பாடுகளை கண்டிக்கும் அரசியல் சமூக செயற் பாட்டாளர்களை காவல் துறை அராஜகத்தை கட்ட விழ்த்து கைது செய்து தனிமைப்படுத்தும் செயலை இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது.

IMG 3992 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

விவசாயத்தினை நம்பி வாழும் மக்கள் உரத்தினை பெற்றுக் கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கான மாற்று கொள்கை அரசினால் முன்னெடுக்கப்பட வில்லை. இவற்றுக்கு வன்மையான கண்டனங்களை நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராடும் மக்கள் மீது காவல் துறையினரை ஏவாதே, இலவச கல்வியை இராணுவ மயப்படுத்தாதே, பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கு கொரோனா நிவாரணம் வழங்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியி ருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர், இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், தேசிய கலை இலக்கிய பேரவையினர், புதிய சிந்தனை பெண்கள் அமைப்பு உட்பட பொது அமைப்புக்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்