கோத்தாபாய கடற்படை முகாமிற்காக தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி, போராட்டம் வெடிக்கும், எச்சரிக்கிறார் – ரவிகரன்

121 கோத்தாபாய கடற்படை முகாமிற்காக தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி, போராட்டம் வெடிக்கும், எச்சரிக்கிறார் – ரவிகரன்

முல்லைத்தீவு – முள்ளி வாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கு நிலை கொண்டிருக்கும் கோத்தாபாய கடற்படை முகாமிற்காக அபகரிக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.

அவ்வாறு தமிழ் மக்களின் காணிகளை கடற்படை முகாமிற்காக அபகரித்தால், மக்களோடு இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்குவோம் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முள்ளி வாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள குறித்த தமிழ் மக்களுக்குரிய 617ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றிற்கு அமைவாக, கடற் படையினருக்கு அபகரிப்புச் செய்வதற்கு ஏற்கனவே கடந்த 2018ஆம் ஆண்டிலும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன.

இருப்பினும் அப்போது இந்த அபகரிப்பு முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணிகளுக்குரிய தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிகளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற் கொண்டிருந்தனர். அதன் அடிப்படையில் அப்போது அந்த ஆக்கிரமிப்பு முயற்சிகள் கைவிடப் பட்டிருந்தன.

அதே வேளை அவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் அவர்கள் மற்றும், எம்.கே.சிவாஜி லிங்கம் ஆகியோர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டதுடன், அது தொடர்பான வழக்கு விசாரணைகள் மூன்று வருடங்களைக் கடந்து தற்போதும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம் பெற்று வருகின்றன.

இந் நிலையில் முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன் 08.07.2021 ஆம் திகதி இடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் மீண்டும் காணிகளை அளவீடு செய்து கடற் படைக்கு அபகரிக்க இருப்பதாக காணிகளுக்குரிய தமிழ் மக்களுக்கு அறிவித்தல் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த ஆக்கிரமிப்பு முயற்சி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே ரவிகரன்  மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு – கரைதுறைபற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதிகளிலுள்ள 271.6249 ஹெக்டெயர் விஸ்தீரணம் உடைய காணிகள், காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் அடிப்படையில் அரசாங்கம் எடுத்துக் கொள்ள இருப்பதாக வர்த்தமானி மூலம் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது.

குறிப்பாக கடந்த 2017ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதியன்று வௌியான 2030/44ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி மூலம், அப்போது காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சராக இருந்த கஜந்த கருணாதிலக இவ் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள, குறித்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அளவீடு செய்து, அவற்றை கடற் படையினருக்கு வழங்குவதற்கான தீவிர முயற்சிகள் பலமுறை இடம் பெற்றிருந்தன.

இவ்வாறாக கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி அன்றும், கோத்தபாய கடற் படை முகாம் அமைந்துள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அளவீடு செய்து அபகரிக்கும் முயற்சி ஒன்று இடம் பெற்றிருந்தது.

இந்த அளவீட்டு முயற்சிக்கு எதிராக குறித்த காணிகளுக்குரிய தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகளுமாக இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தோம்.

நமது ஆர்ப்பாட்டத்தின் பலனாக அந்த அளவீட்டு முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன.

அதேவேளை இவ்வாறு ஆற்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக நான் மற்றும் முன்னாள் வடமாகாணச பை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வட்டுவாகல் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் அன்னலிங்கம் சண்முகலிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டும் இருந்தோம். மூன்று வருடங்களைக் கடந்தும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் தற்போதும் இடம் பெற்று வருகின்றன.

இந் நிலையில் முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன், 08.07.2021 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றினை காணி உரிமையாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அக் கடிதத்திலே குறிப்பிடப் பட்டிருப்பதாவது,

கடந்த 2021.05.12ஆம் திகதியன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மற்றும் கரைதுரைப்பற்று பிரதே செயலாளர் களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நில அளவையானது காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 450) 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம், நில அளவை நாயகத்தால் அளிக்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவின் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் அமைந்துள்ள காணியினை பிரதான கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் பொருட்டு நில அளவை செய்வதற்காக 2021.07.29 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு வருகை தந்து தங்கள் காணிகளின் எல்லைகளையும் விபரங்களையும் இனங் காட்டும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் எனக் குறித்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தங்களினது காணியினை உறுதிப் படுத்தும் ஆவணத்தையும் ஆவணத்தின் பிரதி ஒன்றையும் எடுத்து வரும்படியும், குறித்த கடிதத்தின் மூலம் காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை ஒருபோது ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏன் எனில் அந்தக் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தமது காணிகளை அளவீடு செய்து கடற் படைக்கு வழங்குவதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

அங்கு தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் அமைக்கப் பட்டுள்ள கடற் படைத் தளம் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும்.

இவ்வாறு தமிழ் மக்களின் காணிகளில் அத்துமீறி அமைக்கப் பட்டுள்ள கோத்தாபாய கடற்படை முகாமினால், தமிழ் மக்கள் பலரும் குடியிருக்கவே காணிகளின்றி அவதிப் படுகின்றனர்.

அத்தோடு தமிழ் மக்கள் பலருக்கு அங்கு வாழ்வாதார பயிர்செய்கை நிலங்கள் காணப்படுகின்றன. இதனால் பலர் தமது வாழ்வாதாரத்தினை இழந்து வாடுகின்றனர்.

இதனைவிட இந்த கோத்தாபாய கடற்படை முகாம், அங்குள்ள மீனவ மக்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த அரசிச்சல் எனப்படுகின்ற ஒரு பிரதான வீதியையும் ஆக்கிரமித்துள்ளது.

இவ்வாறு அரிச்சல்பாதை மூடப்பட்டு ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால், அதற்கு அடுத்துள்ள படகு இறங்குதுறை, கரவலைப்பாடு என்பவற்றினை அங்குள்ள மீனவ மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை கோத்தாபாய கடற்படை முகாம் அப்பகுதியில் அமைந்துள்ளதால், நந்திக் கடலின் வடக்காறுப் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிச் செயற்பாட்டில் ஈடுபட முடியாத நிலையும் ஏற்படுகின்றது.

அங்கு பாரம்பரிய மீன்பிடியில் ஈடுபட்ட மக்கள், கடற்படை முகாமிற்கு அருகில் மீன்பிடியில் ஈடுபடும் போது, கடற் படையினர் மீனவர்களை அச்சுறுத்திய, தாக்கிய சம்பவங்களும் பதிவாகி இருக்கின்றன.

இவ்வாறாக தமிழ் மக்களின் குடியிருப்பு நிலங்கள், பயிர்செய்கை நிலங்கள் அபகரிக்கப் பட்டுள்ளன என்ற விடயத்தைத் தாண்டி, தமிழ் மக்களின் பாரிய பொருளாதார வளங்களை பல வழிகளிலும் இந்த கோத்தாபாய கடற்படை முகாம் ஆக்கிரமித்து வைத்துள்ளது.

எனவே தான் இந்த கடற்படை முகாமை அங்கிருந்து அகற்ற வேண்டும் என நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

மேலும் கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள தமிழ் மக்களின் காணிகளை அளவீடு செய்து சட்டரீதியாக ஆக்கிரமிப்புச் செய்யும் முயற்சிகளை உரியவர்கள் கைவிட வேண்டும். அங்கிருந்து அந்த கடற்படை முகாம் அகற்றப்பட வேண்டும்.

எமது தமிழ் மக்களுக்குரிய காணிகளையும், வாழ்வாதார வளங்களையும் அவர்களுக்கே மீளக் கையளிக்க வேண்டும்.

இவற்றிற்கு மாறாக காணி ஆக்கிரமிப்பு முயற்சிகள் தொடர்ந்தால், எமது மண் மீட்புப் போராட்டங்களும் தொடரும் – என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 கோத்தாபாய கடற்படை முகாமிற்காக தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி, போராட்டம் வெடிக்கும், எச்சரிக்கிறார் – ரவிகரன்