நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் : MTV செனல் தனியார் நிறுவனம்

செய்தி சேகரிப்பதற்காக சென்ற நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் மீது சட்டவிரோதமாகவும் கொடூரமான முறையிலும் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக சித்திரவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வேண்டும் என MTV செனல் தனியார் நிறுவனம் பொலிஸ் மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளது.

1994 ஆம் ஆண்டின் சித்திரவதைகள், கொடூரமான மனிதாபிமானமற்ற கீழ்த்தரமான நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாய சட்டத்தின் சரத்துகளுக்கு அமைய, குறித்த நபர்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிற்கு MTV செனல் தனியார் நிறுவனம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் ஊடாக MTV செனல் தனியார் நிறுவனம் பொலிஸ் மா அதிபரிடம் மேலும் மூன்று விடயங்களை வினவியுள்ளது.

  1. நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்களின் மீது யாருடைய உத்தரவின் பிரகாரம் தாக்குதல் நடத்தப்பட்டது?
  2. இந்த சட்டவிரோத மற்றும் கொடூரமான தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய உத்தியோகத்தர்கள் தொடர்பில் உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
  3. ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

இவையே அந்த மூன்று விடயங்களாகும்.

ஊடக நிறுவனம் என்ற வகையில் வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றும் போது, நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்களுக்கு பொலிஸ் மா அதிபரால் அல்லது அவரது உத்தரவின் பேரில் அல்லது வேறு தரப்பினரால் அச்சுறுத்தல் அல்லது அதற்கான முயற்சி இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்துமாறும் MTV செனல் தனியார் நிறுவனம் பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்னவிற்கு அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு காவல்துறை தலைமையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டது.

நன்றி-நியூஸ்ஃபெஸ்ட்