இலங்கைக்கு இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவதன் காரணமாகவும் அவர்கள் அறுகம்குடாவில் ஒரு கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ளதன் காரணமாகவும் அந்த பகுதியில் தாக்குதல் நடைபெறக்கூடிய சாத்தியமுள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருக்கலாம் என காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அருகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;
இலங்கையில் அருகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என தூதரகத்திற்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.
இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள கடுமையான ஆபத்து காரணமாக, தூதரகம் உடனடியாக மற்றும் மறு அறிவித்தல் வரை அறுகம் பேக்கான பயணத் தடையை தூதரக பணியாளர்களுக்கு விதித்துள்ளது.
மறுஅறிவிப்பு வரும் வரை அறுகம் வளைகுடா பகுதியை தவிர்க்குமாறு அமெரிக்க குடிமக்கள் கடுமையாக வலியுறுத்தப்படுகிறார்கள்.
அந்தவகையில் அமெரிக்க பிரஜைகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாக,
அனைத்து சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் மற்றும் அவசரநிலைகளை 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அழைத்து உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, எப்பொழுதும் விழிப்புடன் இருங்கள் மற்றும் உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் உள்ளத்தை நம்புங்கள், ஒரு சூழ்நிலை சரியாக இல்லை என்றால், அதிலிருந்து வெளியேறுங்கள்.
உங்களிடம் எப்பொழுதும் ஏதேனும் ஒரு வகையான தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசிகளை வைத்திருத்தல் வேண்டும்.
செய்திகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்டுவ மேலும் தெரிவித்துள்ளதாவது-
இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் இஸ்ரேலியர்கள் அதிகளவில் அறுகம்குடாவிற்கே செல்கின்றனர்.அந்த பகுதியே அவர்களின் அதிக விருப்பத்திற்குரிய பகுதியாக காணப்படுகின்றது,அவர்கள் அங்கு நீச்சல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
அங்கு சென்றுள்ள சுற்றுலாப்பயணிகள் அங்கு கட்டிடமொன்றை ஆக்கிரமித்துள்ளனர்,இந்த பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் காணப்படுவதால் அங்கு அச்சுறுத்தல் நிலவுகின்றது என சமீபத்தில் எங்களிற்கும் தகவல்கள் கிடைத்தன.
ஆரம்பகட்ட நடவடிக்கையாக நாங்கள் ஏற்கனவே வீதிதடைகளை அமைத்துள்ளோம்,வாகனங்களையும் பொதுமக்களையும் சோதனையிடும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளோம்.
பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் கடற்படையினர் இராணுவத்தினர் அரசபுலனாய்வு திணைக்களத்தினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.