மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தினால் சமூகத்துக்கும், சூழலுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு, அது பகிரங்கப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் முறையான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும் வரை அத்திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப்பேரவை இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் அபிவிருத்தி செயற்திட்டத்தில் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புக்கூறலையும், சகலரது பங்கேற்பையும் மன்னார் மக்கள் கோருகின்றனர். மக்களின் நலனுக்கு அப்பால் அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னிலைப்படுத்தும் நீண்டகால வரலாற்றின் தொடர்ச்சியாகவே மன்னார் காற்றாலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப்பேரவை தெரிவித்துள்ளது.
இவ்வாறான திட்டங்கள் பெரும்பாலும் அதனுடன் தொடர்புடைய சமூகத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளாமலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. யுத்தகால இராணுவமயமாக்கம் மற்றும் காணி சுவீகரிப்பு முதல் நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் வரை சமூகங்கள் நீண்டகாலமாக விலக்களிக்கப்பட்ட நிர்வாகத்தை அனுபவித்திருக்கின்றன.
அதன் வரிசையில் தற்போதைய மன்னார் காற்றாலைத் திட்டமானது அந்த விலக்களிக்கப்பட்ட வடிவத்தின் ஒரு நீட்சியாகவே அமைந்திருக்கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அண்மையில் மன்னாரில் வெடித்த போராட்டம் திடீரென உருவானதல்ல. மாறாக அப்போராட்டம் பல வருடங்களாக சமூகத்தின் குரல்களுக்கு செவிசாய்க்கப்படாததாலும், மனித உரிமைகள் மற்றும் சூழலியல் பாதுகாப்பு நியமங்கள் புறக்கணிக்கப்பட்டதாலும் உருவானதாகும்.
இப்போராட்டம் மன்னாரில் நீண்டகாலமாகத் தொடரும் கனிய அகழ்வு மற்றும் காணி உரிமை சார்ந்த போராட்டங்களை ஒத்ததாகும். பல்வேறு ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலும் அதானி நிறுவனம் இக்காற்றாலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது முன்னெடுக்கப்படும் இத்திட்டமானது ஏற்கனவே அரசினால் அமுல்படுத்தப்படும் தீர்மானங்களில் உள்வாங்கப்படாத மன்னார் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு துரோகமாகும் என்றும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப்பேரவை தெரிவித்துள்ளது.
இவ்வாண்டின் தொடக்கத்தில் அத்திட்டத்திலிருந்து அதானி நிறுவனம் விலகிய பின்னரும், உள்ளுர்வாசிகளின் கரிசனைகளை பொருட்படுத்தாமல், ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் தனியார் அபிவிருத்தி முனைவோருடன் இணைந்து இலங்கை மின்சார சபையினால் அத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் மன்னாரில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை உறுதிப்படுத்துமாறும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மிகையான பாதுகாப்புப்படையினரைப் பயன்படுத்துவதை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.