தமிழ்நாட்டு முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நூற்றாண்டுவிழா நடத்த கிழக்கு மாகாணம் பொருத்தமில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்.
தமிழ்நாட்டு முதல்வர் அமரர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டுவிழா இந்தியாவில் தமிழ்நாடு முழுவதும் தற்போது இடம்பெறுவதற்கான முன் ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றன. அவர் பிறந்த நாட்டில் அவர் ஆட்சிசெய்த தமிழ்நாட்டில் கட்டாயம் அந்த மக்கள் செய்வது நல்லது.
அவர் ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவரும், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழகத்தின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் திகழ்ந்த நூற்றாண்டு நாயகர் கருணாநிதியின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழகத்தின் வருங்காலத் தலைமுறையினர் என்றென்றும் நினைவில் போற்றும் வகையில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் ஜுன் 2023 திங்கள் முதல் ஜுன் 2024 திங்கள் வரை தமிழக அரசால் கொண்டாட முடிவு செய்யப்பட்டது நல்ல விடயம்.
ஆனால் இலங்கையில் கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் விரைவில் கிழக்கு மாகாணத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா செய்யவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊடகங்களில் (05/07/2023) கருத்து வெளியிட்டிருந்தார்.
உண்மையில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கிழக்கு மாகாணத்தில் நடத்துவது பொருத்தமான ஒன்றாக தற்போது இல்லை. வடக்கு கிழக்கு மக்கள் கடந்த பல சகாப்தங்களாக இனப்படுகொலைகளை சந்தித்தபோதெல்லாம் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் அழுத்தம் கொடுத்தாலும் ஆக்கபூர்வமாக அவர் எதையும் செய்யவில்லை என்ற ஒரு கருத்து வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் மத்தியில் உண்டு.
2006,ல் திருகோணமலை மாவிலையாற்றில் ஆரம்பித்த போர் 2009, மே,18,ல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற போது வடக்கு கிழக்கு தமிழர்கள் பல இலட்சம் மக்கள் மாண்டபோதும் முதலமைச்சர் கருணாநிதியால் போரை நிறுத்தவோ, தமிழ்மக்களை காப்பாற்றவோ இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் செய்யவில்லை என்ற ஒரு மனவேதனை தமிழ்மக்கள் மத்தியில் உண்டு.
இவ்வாறான நிலையில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றாலும் மக்கள் அதனை விரும்பி கலந்துகொள்ளும் நிலை ஏற்படாது என்பதே எனது தனிப்பட்ட கருத்து.
கலைஞர் கருணாநிதி அவர் போற்றுதற்குரியவர் பாராட்டுதற்க்குரியவர் என்பதெல்லாம் உண்மை ஆனால் அவர் தொடர்பாக விழா எடுக்ககூடிய இடமாக கிழக்கு மாகாணம் பொருத்தமானது இல்லை என்பதே எனது தாழ்மையான கருத்து எனக் குறிப்பிட்டள்ளார்.