பலாலியில் இராணுவம் முன்னெடுத்த முயற்சி மக்களின் எதிர்ப்பால் முறியடிப்பு

தற்காலிகமாக தனியார் காணிகள் ஊடாக, யாழ். பலாலி இராஜ இராஜேஸ்வரி ஆலயத்திற்குள் செல்லும் பாதையை நிரந்தர பாதையாக மாற்றி அமைக்கும் இராணுவத்தின் முயற்சி இடைநிறுத்தப்பட்டது.

முன்னதாக குறித்த பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்த நிலையில், காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையை அடுத்து இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தியுள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறினர்.
அதனை தொடர்ந்து அந்தப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வந்தது.

35 வருட காலத்துக்கு பின்னர், கடந்த ஆண்டு ஜூன் மாதமளவில் குறித்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு இராணுவத்தினர் தனியார் காணிகளின் ஊடாக அனுமதி வழங்கி இருந்தனர்.
இந்தநிலையில், குறித்த பாதையை நிரந்தர பாதையாக்கும் நோக்குடன் இராணுவத்தினர் பாதையில் மேலதிகமாக மண்ணை கொட்டி பாதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த காணி உரிமையாளர்கள் அது தொடர்பில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் ,வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றுக்கு அறிவித்ததை அடுத்து இராணுவத்தினரின் பாதை அமைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு செல்லும் நிரந்தர பாதை உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள போதிலும், பாதையை அண்டிய பகுதிகளில் இராணுவ முகாம்கள் எதுவும் இல்லை எனவும், பாதையை அண்மித்த பகுதியில் இராணுவத்தினரின் வாகன திருத்தகம் ஒன்றே காணப்படுவதாகவும் அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே ஆலயத்திற்கு செல்லும் பிரத்தியோக பாதையை விடுவிப்பதனால் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஏற்படாது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.