ஈழத்தமிழர்களின் இறைமை நீக்கத்துக்கு தேசிய நீக்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையையும் பயன்படுத்தியுள்ள அநுர அரசு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 360

இவ்வாரம் எப்படித் தொடங்கியுள்ளது? இரண்டு வருட ஹமாஸ் இஸ்ரேலியப் போர் அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்பின் 20 அம்ச திட்டத்தால் ஓய்ந்து பலஸ்தீனிய மக்கள் பெருமளவில் காசாவை நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்நேரத்தில் சிங்கப்பூர் ஆய்வாளர் ஒருவர் கிறின் ஹவுஸ்களில் இருந்து வெளிவருபவை காலநிலை சீரழிவை ஏற்படுத்துவதை விட வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவருபவை அதிக பிரச்சினைகளை உருவாக்குகிறது என்பதனை கவனத்தில் கொண்டு அமெரிக்க அரசத்தலைவர் தனது நாட்டிலேயே பல பிரச்சினைகளை படைபலத்தால் தீரிக்க முயற்சிக்கும் நேரத்தில் அவரின் ஆட்சியின் பெருங்சாதனையாக எகிப்துக்கு வெற்றிப்பவனி நடாத்தி அதன் பின்னர் இஸ்ரேலுக்கும் நட்புப்பயணம் செய்யவுள்ளமையை உலகு பார்க்க வேண்டியுள்ளது. எகிப்து கட்டார் துருக்கி மட்டுமல்ல மற்றைய அரபுநாடுகளும் இஸ்ரேலின் ஆயுத பலத்தின் பின்னணியில் அதனுடான ஒருவகையான இணக்கப்பாட்டில் செயற்பட விரும்புவதை பலஸ்தீன மக்களின் அவர்களின் நிலைப்பாட்டில் காண முடிகிறது. இந்நிலையில் வல்லாண்மைகள் பிராந்திய மேலாண்மைகளின் இன்றைய புதிய நிலைகளைக் கருத்தில் கொண்டு ஈழத்தமிழர்களும் தாயகத்திலும் அனைத்துலகிலும் புதிய அணுகுமுறைகளை உருவாக்க வேண்டுமென்ற செய்தியை இந்த அமைதி ஒப்பந்தம் வெளிப்படுத்துகிறது என்பது இலக்கின் கருத்து
மேலும் கிட்டிய குடும்ப உறுப்பினர்களை இஸ்ரேல் இனஅழிப்புச் செய்த பிரிவின் வலிகளைத் தாங்கிய இதயத்துடன், இஸ்ரேலால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு விட்ட தங்களின் நகரங்கள் கிராமங்கள் ஊர்களில் உள்ள தங்களின் வீடுகளுக்குத் தங்கள் மண்ணில் தாங்கள் வாழ்ந்தேயாக வேண்டும் என்கின்ற உள்ள உறுதியுடன் பல்லாயிரக்கணக்கில் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த அமைதித் திட்டம் நிலைக்குமா நிலைக்காதா என்ற கேள்விக்கே இடம்கொடுக்காது தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற தங்களில் இருந்து பிரிக்க இயலாத உரிமைகளை மண்ணில் வாழ்ந்தே நிலைநிறுத்த வேண்டுமென பலஸ்தீன மக்கள் மீண்டும் ஒரு புதிய வாழ்வை ஆரம்பிக்க உற்சாகத்துடன்  வெறுங்கையராக ஆனால் வாழ்வை வெறுக்காத வீரத்துடன் ஊர் திரும்பும் காட்சியைப் பார்க்கின்ற பொழுது மகிழச்சியாகவுள்ளது. அதே நேரத்தில்  அரசியல் புகலிடம் கொடுத்த நாடுகளிலேயே தங்கள் எதிர்காலத்தைத் திட்டமிட்டு வாழ்ந்து தங்கள் சந்ததிகளுக்கும் அதுவே சொர்க்கமென வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழமக்களுக்கு அவர்களின் அரசியல் இலக்குகளுக்கு உலக மக்களின்  ஆதரவு ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்விக்கு இதன் வழி விடையும் கிடைக்கிறது.
பலஸ்தீனியர்களுக்கு தங்கள் தாய் மண்தான் தங்களுக்கு மட்டுமல்ல தங்களின் எதிர்கால சந்ததிக்கும் பாதுகாப்பான அமைதிக்கும் வளர்ச்சிக்குமான ஒரே இடம் என்கின்ற உண்மை தெளிவாகப் புரிகிறது. இதுவே அவர்களுக்கான மதிப்பும் மரியாதையுமாகி அவர்களுக்கான உலகக் குரலாக எழுகிறது. பிரான்சிய அரசத்தலைவர் அரேபிய வெளிநாட்டு அமைச்சர்களை அழைத்து இருதேசத் தீர்வே எட்டப்பட வேண்டியது, தற்காலிகமாக பலஸ்தீனிய மக்களின் இன்றைய துன்ப வாழ்வு குறைந்தாலும் பலஸ்தீனத் தேசத்தன்மை இருதேசத் தீர்வால் உறுதிப்படுவது எதிர்காலப் பாதுகாப்புக்கு அவசியம் என்பதைத் தெளிவாக்கியுள்ளார். இதன் மூலம் அனைத்துலக நாடுகளையும் இஸ்ரேல் பலஸ்தீனியர்களின் இறைமை நீக்கத்துக்கும் தேசிய நீக்கத்துக்கும் தன்னாட்சி நீக்கத்துக்கும் பயன்படுத்த முயற்சிப்பதை அரபுநாடுகள் உணரக்கூடிய வாய்ப்புத் தோன்றியுள்ளது. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு அவர்களின் இறைமை நீக்கத்துக்கும் தேசிய நீக்கத்துக்கும் தாங்கள் தங்களின் மண் மேலான இறைமையின் அடிப்படையில் தங்களின் அரசியல் கோரிக்கைகளைக் கட்டமைக்காததே காரணம் என்பதையும் இந்த செய்திகள் உணர்த்த வேண்டுமென்பதே இலக்கின் எண்ணம்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் 192 நாடுகளில் 143 நாடுகள் தேசமாகவே பலஸ்தீனத்தை அங்கீகரித்த நிலையிலும் பாதுகாப்புச் சபையின் ஐந்து நாடுகளில் நான்கு நாடுகள் பலஸ்தீனத்தை ஏற்ற நிலையிலும் ஒருநாட்டின் ரத்து அதிகாரத்தால் பலஸ்தீனிய மக்கள் தங்களுக்கான தங்களின் தேசத்தில் தங்களுக்கான தன்னாட்சியை அமைக்கவியலாது இத்தனை மனிதத் துன்பங்களுக்குப் பின்னரும் இஸ்ரேலின் இறைமைக்குள் உள்ளடங்கும் பலஸ்தீன அதிகாரசபையின் ஆட்சியின் புதிய வடிவான ட்ரம்பின் பலஸ்தீனத்தின் தனியாட்சி நிலையை மீளவும் தடுத்த ஆட்சி முறைமைக்குள் வாழத்தயாராக பலஸ்தீன மக்கள் தங்கள் மண் நோக்கி இவ்வாரத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இதுதான் வள்ளுவர் கூறிய ஒப்புரவாதல். அதாவது உலக நடையறிந்து ஒழுகுதல். உணர்ச்சிக்குப் பலியாகாது உணர்வு பூர்வமாக அறிவார்ந்த முறையில் தங்கள் வாழ்வை தங்கள் மண்ணில் மீளவும் கட்டியெழுப்பி தேசநிர்மாணத்தைச் செய்து தங்களுக்கான தாயக தேசிய தன்னாட்சியை மீளப் பெறுவதற்கான அடுத்த கட்டப் போராட்டத்தை நோக்கி பலஸ்தீனிய மக்கள் நடக்கத் தொடங்கி விட்டனர். அவர்களுடைய உறுதியின் உறைவிடமான அவர்களின் உள்ளத்துக்கு இலக்கு தலைவணங்குகிறது. அவர்களின் விழ விழ எழுவோம் என்னும் தளராத உழைப்பு முயற்சிக்கு இலக்கு இருகரம் தட்டி வரவேற்கின்றது. இலட்சியம் அசையாத உறுதியுடன் உள்ளத்தில் இருக்க வேண்டும். மாறும் உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ற வாழ்வை அமைக்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்ந்து இலட்சியத்தை அடையலாம். இல்லையேல் எதிரியின் நோக்கான வாழ்வை இழந்து இலட்சியத்தையும் அழியவிட வேண்டி வரும். இவற்றை இங்கு எழுதுவதன் நோக்கம் ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினையும் பலஸ்தீன மக்களின் தேசியப் பிரச்சினையும் 1948 இல் பிரித்தானிய காலனித்துவ அரசால் உருவாக்கப்பட்டு காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாக இன்று மட்டும் தொடர்கின்ற உலகப்பிரச்சினை. ஆயினும் இரண்டையுமே வல்லாண்மைகளும் பிராந்திய மேலாண்மைகளும் தங்களின் பாதுகாப்பு பொருளாதாரத் தேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர் என்பது வெளிப்படையான உண்மை. அதிலும் 09.10. 2025 இல் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் 09.10. 1945 இல் தாங்கள் 1833 முதல் 115  ஆண்டுகளாகத் தம் விருப்பப்படி ஒரே நாடாக ஆண்ட சிலோன் என்னும் அரசுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்காகத் தாம் 18.11. 1944 இல் நியமித்த சோல்பரி ஆணைக்குழுவின் அரசியலமைப்பு குறித்த அறிக்கையைப் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் வெளியிட்டனர். அன்று முதல் இன்று வரை 80 ஆண்டுகள் ஈழத்தமிழர்கள் பிரித்தானியர் கைப்பற்றிய யாழ்ப்பாண வன்னிய அரசுக்களின் இறைமையைத் தாங்கள் மீளவும் மீளுறுதி செய்யும் தேசிய விடுதலைப் போராட்டத்தை சிங்கள அரசாங்கங்களின் இனஅழிப்புக்களிடை சனநாயக வழிகளில் தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.
இதற்கிடை சிறிலங்கா இம்முறை மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா குறித்த தீர்மானத்துக்கான வாக்கெடுப்பைக் கோராது விட்டதன் மூலம் தாங்கள் அனைத்துலகத்தை முழுஅளவில் வென்று விட்டதாக அதன் ராஜதந்திரி ஒருவர் வீரகேசரிக்குச் செவ்வி வழங்கியுள்ளார். தீர்மானத்தை முன்வைத்த பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளும் சிறிலங்காவின் புதிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் முன்னெடுப்புகளுக்கு  முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஐரோப்பிய நாடுகளும் தமக்கான ஆதரவுநாடுகளாக மாறியுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரும் தனது முழுமுயற்சியையும் நீதியான விசாரணையை விடுத்து சிறிலங்காவின் குற்றமிழைத்த படையினரைக் காக்கக் கூடிய வகையிலேயே ஐக்கிய நாடுகள் சபையில் எடுத்துள்ளமையை அவரின் பேச்சுக்களே வெளிப்படுத்தி வருகின்றன. இவ்வாறான முயற்சிகள் வழியாக ஈழத்தமிழர்களின் இறைமை நீக்கத்துக்கும் தேசிய நீக்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபையை அநுர அரசு பயன்படுத்தியுள்ளமை தெளிவாகிறது.
மேலும் மன்னார் ஆயர் சிறிலங்காவின் அரசத்தலைவரை சந்தித்ததின் பின்னர் 14 காற்றலைகளையும் நிறுவும் முயற்சியில் அவர் மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து இம்மி கூட நகரமாட்டார் என்பதையும் வடக்கு கிழக்கு மக்கள் முழுப்பேரையும் ஒன்றிணைத்த மக்கள் போராட்டங்கள் வழியாகவே ஏதாயினும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனவும் செய்தியாளர்களுக்கு விளக்கியுள்ளார்.  தாயகத்திலும் சரி அனைத்துலகிலும் சரி ஈழத்தமிழர்கள் ஒன்றிணைந்து சனநாயக வழிகளில் செயற்பட வேண்டிய தேவை இப்பொழுது முக்கியத்துவம் பெறுகிறது என்பதே இலக்கின் இவ்வாரக் கவனப்படுத்தலாகவுள்ளது.
அத்துடன் இந்தியா ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சரை டில்லிக்கு அழைத்து உதவிகளை வாரி வழங்கி இன்னும் நாலு ஆண்டுகளில் தனது தூதரகத்தை ஆப்கானிஸ்தானில் திறக்கவும் முடிவு செய்துள்ளமை இந்தியாவுக்கு மத்திய ஆசியாவுக்கான நுழைவாயிலாக ஆப்கானிஸ்தானை கட்டமைக்க வேண்டிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை வெளிப்படுத்துகிறது. இந்நேரத்தில் குளோபல் சவுத்துடைய ஆணிவேராக ஈழத்தமிழினத்தை அதற்குரிய இடத்தை அளித்து இந்தியாவால் மாற்ற முடியும் என்ற உண்மையை ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு உரையாடல்கள் மூலம் ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் ஈழத்தமிழரின் இறைமை நீக்கம் தேசிய நீக்கம் தெற்காசியாவில் குளோபல் சவுத்துக்கு எதிரான எத்தகைய தீய விளைவுகளை மற்றைய நாடுகள் ஏற்படுத்தக் கூடியவொன்றாக அமைந்து விடும்  என்ற உண்மை உணரப்படும் என்பதும் இலக்கின் கருத்தாகவுள்ளது.

Tamil News