போதைப் பொருள் பாவனையால் யாழில் மற்றொரு இளைஞன் பலி

சிறையில் இருந்து வெளிவந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக ஹெரோயின் போதைப் பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தில் நேற்று முன்தினம் இரவு தென்மராட்சி – சாவகச்சேரி – மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்தவரே உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞர் ஒரு மாதத்துக்கு முன்னர் போதைப்பொருள் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் கடந்த வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட அன்று நீர்வேலியிலுள்ள உறவினரின் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், அவர் திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட் டுள்ளதாக அவரின் சகோதரருக்கு உறவினர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து அவரை யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அதிகளவில் ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்தமையே மரணத்துக்கு காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அவரின் மரணம் குறித்த உடற்கூற்று பரிசோதனைகளை சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் மேற்கொண்டிருந்தார்.