சர்வதேச நீதி பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் மற்றுமொரு போராட்டம்

உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிப்பதுடன், சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழின அழிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, போர்க் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச விசாரணை கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டத்திற்கு அனைத்துத் தமிழ் தேசிய சக்திகளையும் ஆதரவு வழங்குமாறு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை, யாழ்ப்பாணம் செம்மணியில் 9 கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் (24) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

இதேவேளை, மன்னாரில் மேற்கொள்ளப்படும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக வவுனியா இளைஞர்களின் ஏற்பாட்டில் சுற்றுச் சூழலுக்கான இளைஞர் நடவடிக்கை அமைப்பின் பங்கேற்புடன் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது கருநிலம் என்னும் தொனிப் பொருளில் மன்னார் பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது.