மற்றுமொரு புயல் இலங்கை கரையை கடக்கவுள்ளது – அவசர எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, அடுத்த சில மணித்தியாலங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது நாளை (09) மாலை 5.30 முதல் இரவு 11.30 வரையான காலப்பகுதியில், ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனைக்கு இடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமாக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
மேலும், ஊவா மாகாணத்திலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் முதல், காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரங்களை அண்மித்த கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், பலத்த காற்றும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடற்றொழிலாளர்களும், கடற்படையினரும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு தொடர்பான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நீர்நிலைகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளனர். ஏதேனும் அனர்த்த நிலை ஏற்படுமாயின் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறியப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.