உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மற்றுமொரு வழக்கும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் உறுப்பினரான கெலும் மத்துமகே தாக்கல் செய்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர்களான ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று (26) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மன்றில் முன்னிலையாகி, விடயங்கள் தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைத்தார். அதன்படி, சுரேஷ் சலேவின் கைதை சுட்டிக்காட்டி அவர் தமது கருத்துக்களை வெளியிட்டார். நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு பாரிய அர்ப்பணிப்புகளை சுரேஷ் சலே ஆற்றியிருந்ததாக சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறை பொறுப்பாளராக செயற்பட்ட தமிழ்ச்செல்வத்தை இல்லாது செய்வதற்காக, சுரேஷ் சலே முன்னின்று செயற்பட்டார் என்றும் மன்றுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேசதுறை பொறுப்பாளராக செயற்பட்ட குமரன் பத்மநாதனை, மலேஷியாவில் இருந்து, சுரேஷ் சலே நாட்டுக்கு அழைத்து வந்ததாகவும் சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார். எனவே, தேசியப் பாதுகாப்புடன் விளையாடுவது சிறந்த விடயம் அல்ல என்றும் அவர் மன்றுக்குக் கூறியுள்ளார்.

இந்தநிலையில், 2015 ஆம் ஆண்டும் இவ்வாறானதொரு நடவடிக்கை இடம்பெற்றதை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, அதனைத் தொடர்ந்து நாட்டின் ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பு நிலைமையும் அபாயத்தில் வீழ்ந்ததாகவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டமையுடன் தொடர்புடைய விசாரணையை திசைதிருப்ப முயற்சித்ததாக குற்றம் சுமத்தி, தனது சேவை பெறுநரான கெலும் மத்துமகேவுக்கு எதிராக, குற்றப் புலனாய்வு திணைக்களம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.

அவ்வாறானதொரு விசாரணையை மேற்கொள்வதற்கு எந்தவித அடிப்படை சாட்சிகளும் இல்லை எனவும் சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் தலைமையில் நடத்தப்படும் இந்த விசாரணைகளில், தமது சேவை பெறுநருக்கு நீதியை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலான என்ற தனிநபர் ஒருவர், பிரித்தானியாவிலுள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலை அடிப்படையாகக் கொண்டே குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான விசாரணைகளில் பாதிக்கப்பட்டோர் தரப்புக்கு எந்தவித நீதியும் கிடைக்கப் போவதில்லை என்றும் சட்டத்தரணி அலி சப்ரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.