அரசாங்கத்தால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக வழமையான பொதுமக்கள் தமது அன்றாட வாழ்வியல் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் 1979ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவுக்கமைய அவருக்குரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளை வழங்குவதில் ஈடுபடும் எந்தவொரு அரச கூட்டுத்தாபனம் அல்லது அரச திணைக்களம் அல்லது உள்ளுராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவுச் சங்கம் அல்லது அவற்றின் கிளையொன்றினால் வழங்கப்படும் சேவைகள் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக வழமையான பொதுமக்கள் வாழ்வைக் கொண்டுநடத்துவதற்கு இன்றியமையாததெனக் கருதப்படுகிறது.
அந்த வகையில் மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள், எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் வழங்கல் அல்லது விநியோகம், வைத்தியசாலைகள், தாதியர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களின் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சையளித்தல் ஆகியவை தொடர்பில் அவசியமான அல்லது மேற்கொள்ள வேண்டிய எந்த வகையிலான சகல சேவைகள், வேலைகள் அல்லது தொழில் பங்களிப்பு
பயணிகள் அல்லது பொருட்களை கொண்டு செல்வதற்கான பொது போக்குவரத்து சேவைகள், வீதிகள், பாலங்கள், மதகுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் புகையிரத பாதைகள் அடங்கலாக பாதைகள், புகையிரத பாதைகள் அல்லது வான்வழி போக்குவரத்து சேவைகள், சுற்றுலா சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பேணிச்செல்லல், நீர் வழங்கல் மற்றும் வடிகால் தொடர்பான சகல சேவைகள்.
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் வழங்கல், பாதுகாப்பு மற்றும் விநியோகம் தொடர்பான சகல சேவைகள், அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர்கள், சமூர்த்தி அபிவிருத்தி அலுவலர்கள், விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள், சமூக வலுவூட்டல் அலுவலர்கள், கிளீன் ஸ்ரீலங்கா குழு அலுவலர்கள் உட்பட அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் கள மட்ட அலுவலர்களால் மேற்கொள்ள வேண்டிய அல்லது மேற்கொள்ள அவசியமான எந்தவொரு வகையான அனைத்து சேவைகள், வேலை அல்லது தொழிலாளர் பங்களிப்புகள்.
அவசர நோயாளர் காவு வண்டி சேவைகள், இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கி மற்றும் காப்புறுதி நடவடிக்கைகள், நீர்,மின்சாரம், வடிகால் மற்றும் கழிவுநீர் வடிகால் அமைப்புகள், தீயணைப்பு மற்றும் நோயாளர் காவு வண்டி சேவைகள், (கழிவுகளை கொண்டுசெல்லல் மற்றும் அகற்றுதல் உட்பட) கழிவு சுத்திகரிப்பு மற்றும் குப்பைகளை அகற்றுவதற்காக ஏதேனும் உள்ளூராட்சி நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏதேனும் பணிகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் சகல சேவைகள்.
நீர்ப்பாசனம் தொடர்பான சகல சேவைகள், தொலைபேசி, தொலைத்தொடர்பு மற்றும் ஊடகம் தொடர்பான சகல சேவைகள், தாழ் நிலங்களை மீட்டெடுப்பது மற்றும் அபிவிருத்தி செய்தல் தொடர்பான சகல சேவைகள் மற்றும் விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சேவைகள் தொடர்பான சகல சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.



