நாடு எதிர் கொண்டிருந்த மிக மோசமான பொருளாதார நெருக்கடியையடுத்து, சுனாமி பேரலையென பொங்கிப் பிரவகித்த காலிமுகத்திடல் போராட்டம் ஜனாதிபதி கோத்தாபாய தலைமையிலான பொதுஜன பெரமுன ஆட்சியை நிலைகுலையச் செய்தது.
தன்னெழுச்சி பெற்று வெகுண்டெழுந்த மக்களின் சீற்றத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் உயிர் தப்புவதற்காக ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ நாட்டைவிட்டு ஓடிச் சென்றார். அஞ்ஞாதவாச நிலையில் இருந்தே அவர் தனது ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்தார்.
ஆட்சி நிலைகுலைந்து இலங்கையின் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை வரலாறு காணாத வகையில் தலைகீழாகிப் போனது. அந்த நிலையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு எதிர்க்கட்சியினர் முன் வரவில்லை. கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பொறுப்பையும் தொடர்ந்து ஜனாதிபதி பதவியையும் ஏற்று ஓர் அரசியல் இரட்சகனாக நாட்டைப் பாதுகாக்க முன்வந்தார்.
பொருளாதாரப் படுகுழியில் இருந்து நாட்டை எப்படியும் மீட்டெடுப்பேன் என சூளுரைத்த அவர், சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிகளைப் பெறுவதற்கான மீட்பு நடவடிக்கைகளில் முழு வீச்சில் ஈடுபட்டார். நாடாளுமன்றத்தில் ஒரேயொரு ஆசனத்தை மட்டுமே பெற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி தன்னிகரற்ற வகையில் ஆட்சியைத் தொடங்கினார்.
ரணில் விக்கிரமசிங்க சாதாரண அரசியல்வாதியல்ல. பாரம்பரிய அரசியல் பின்னணியிலான குடும்ப வரலாற்றையும், இளமையிலேயே அரசியலில் புகுந்து இலங்கையின் இரு கட்சி நாடாளுமன்ற அரசியல் போக்கில் பழுத்த அனுபவம் வாய்ந்தவராவார். பேரின அரசியல் போக்கின் ஆழமான நுணுக்கங்கள் கைவரப்பெற்றிருந்த தந்திரோபாய செயல் வல்லமை கொண்ட ஒரு சிங்களப் பேரினவாத அரசியல் தலைவராகவும் அவர் திகழ்ந்தார். திகழ்கின்றார். அவர் தனது அரசியல் அனுபவத்தையும் செயல் வல்லமையையும் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் செயன்முறையில் பரீட்சிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
ஆறு தடவைகள் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்து பேரின மேலாண்மை வியூக நிலையில் சிறுபான்மைத் தேசிய இன மக்களின் அரசியல் நலன்களை இலாவகமாகச் சூறையாடுவதில் சிறந்த தந்திரோபாயமிக்க அரசியல் தலைவராக அவர் வெளிப்பட்டிருக்கின்றார்.
ஒரு தடவையாவது, நாட்டின் ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்ற அவரது அரசியல் கனவு ஜனநாயகக் கட்டமைப்பு வழிமுறைகளின் ஊடாக நிறைவேறவே இல்லை. ஆனால் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ நாட்டைவிட்டோடி பதவி துறந்ததையடுத்து, அரசியல் அதிர்ஸ்டம் அவருடைய கதவைத் தட்டியது. அந்தப் பொன்னான வாய்ப்பை அவர் சரியான வாய்ப்பாகப் பற்றிப் பிடித்துக் கொண்டார். இதனையடுத்து, வரலாறு காணாத வகையில் நிறைவேற்றதிகார பலத்தை முழுமையாகப் பயன்படுத்துகின்ற ஜனநாயக வழி வந்த சர்வாதிகாரியாகவும் அவர் கோலோச்சிக் கொண்டிருக்கின்றார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்ற நாட்டைப் பாதுகாக்கும் ‘தேசிய கடமையில்’ கண்ணும் கருத்துமாக ஈடுபட்ட அவர் பொலிசாரினதும், ஆயுதப் படைகளின் பலத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி நெருக்கடி நிலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்த அரகலய போராட்டக்காரர்களைத் தேடிப் பிடித்து முறியடித்துள்ளார். இதுகால வரையிலும் இல்லாத வகையில் அரச அதிருப்தியாளர்களையும், அவர்களது செயற்பாடுகளையும் ஒட்ட வாலை நறுக்கிய விதத்தில் நசுக்கி அழித்தார்.
தொடர்ந்து, அரசின் அரசியல் உரிமை, அடிப்படை உரிமை, மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்த எதிர்ப்புக் குரல்களை, இறுக்கமான அதிகார பலத்தைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி அடக்கலானார்.
ஜனநாயக வழிகளிலான உரிமைக் கோஷங்களும், தொழிற்சங்க அடிபப்படை உரிமைப் போராட்டங்களும் வெறுமனே அரச எதிர்ப்புப் போராட்டங்களாகக் கருதி அடக்கி ஒடுக்கலானார். மனித உரிமைகள், அடிப்படை உரிமை சார்ந்த ஜனநாயக எதிர்ப்புரிமை நடவடிக்கைகளை, அரச எதிர்ப்புக்கான பயங்கரவாத நடவடிக்கையாகச் சுட்டிக்காட்டி எதேச்திகாரப் போக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றார்.
அரசியலமைப்புpன் அடிப்படை ஜனநாயக உரிமை மீறல்கள், அதிகாரத் துஸ்பிரயோகம் உள்ளிட்ட அதிகாரப் பலத்தைக் கொண்ட அரசச் செயற்பாட்டு நடவடிக்கைகளை ஆட்சியியலின் தவிர்க்க முடியாத ஓர் நடவடிக்கை அம்சமாகச் சுட்டிக்காட்டி, அதற்கு எதிர்கட்சியினரும், பொது அமைப்புக்களும், ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுப்பவ்களும், பொது அமைப்புக்களும் பொது மக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அடிக்கடி தனது நாடாளுமன்ற சிறப்புரைகளின் மூலம் வலியுறுத்தி வருகின்றார்.
பொருளாதார மீட்சிக்கான ஒத்துழைப்புச் செயற்பாடுகளின் மிக முக்கிய அம்சமாகிய அரசாங்கத்தின் செலவினங்களை முடக்குதல், அனாவசிய செலவுகளை முடிவுக்குக் கொண்டு வருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணியை சேமிக்கின்ற சர்வதேச நாணய நிதிக்குழுவின் பொருளாதாரத் தந்திரோபாய நடவடிக்கைகளை அட்சரம் பிசகாமல் கடைப்பிடிக்க முயன்று வருகின்றார்.
அந்த நடவடிக்கையின் முக்கிய அம்சமாகவே, உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்காக வரவு செலவுத் திட்டத்தில் வகுத்தொதுத்துச் சட்டமாக்கிய ஒரு செயற்பாட்டை முடக்கி வருகின்றார். இது ஜனநாயக விரோத நடவடிக்கை என்ற போர்வையிலான உரிமை மீறல் – மக்களின் வாக்களிக்கின்ற இறைமை வழியிலான அடிப்படை ஜனநாயக உரிமையை மீறுகின்ற செயல் என்ற வகையில் தேர்தலுக்கான நிதி முடக்கத்திற்கு எதிராக மூன்று வழிகளில் உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்தத் தடை உத்தரவை அரசும் அரசின் செயற்பாடுகளைத் தடையின்றி செயற்படுத்துகின்ற அரச இயந்திரப் பொறிமுறைகளும் அரச உயரதிகாரிகளும் துணிந்து மீறிச் செயற்பட்டு வருவதைக் காண முடிகின்றது.
நீதிமன்ற உத்தரவை மீறுதல் என்பது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும். இதனைப் பொருட்படுத்தாமல் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இது விடயத்தில் சட்டவாக்கத் துறையாகிய அரச தரப்பு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் முழு வீச்சில் நீதித்துறையுடன் முரண்பட்டிருக்கின்றது.
நீதிமன்ற உத்தரவு அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறும் வகையிலான செயற்பாடாகும் என சட்டவாக்கத்துறை சுட்டிக்காட்டி உள்ளது. இந்த வகையில் நீதித்துறையின் வலுவேறாக்கல் அதிகார சிறப்புரிமைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்தும் நாடாளுமன்றத்திற்கு வெளியில் அரச ஆதரவு அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் சிறப்புரிமையாளர்கள் என்ற கோதாவில் துணிகரமான வாய் வீச்சுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனநாயக வழிமுறையில் எதிர்ப்புச் செயற்பாடுகளும் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற நடவடிக்கைகளும் அதிகார வலிமை கொண்ட ஆட்சியாளர்களுடன் அதிகார பலமற்ற நலிந்த நிலையில் உள்ள மக்கள் பேச்சுவார்த்தைகளின் ஊடாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளாகவே அமைந்திருக்கின்றன. இவ்வாறு தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கையானது, பேச்சுரிமை என்றும் கருத்து வெளிப்படுத்துகின்ற அடிப்படை ஜனநாயக உரிமை என்றும் ஆய்வாளர்களினால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஆனால் மக்களுடைய இந்த அடிப்படை அரசியல் உரிமை ஆட்சியாளர்களினால் அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் பகைமை ரீதியிலான பயங்கரவாத நடவடிக்கையாகவே நோக்கப்படுகின்றது, இது துரதிஸ்டவசமான ஒரு நிலையாகும்.
தேசம் முழுதும் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கின்ற ஒரு சூழலில் அரசாங்கம் தனித்துச் செயற்பட்டு நெருக்கடி தணிப்பை மேற்கொள்ள முடியாது. நாட்டு மக்கள் அனைவரினதும் அர்ப்பணிப்புடனான ஒத்துழைப்பும், எதிரக்கட்சியினரது ஆதரவும் இதற்கு அவசியம். தொழிற்சங்கங்களின் தோழமை ரீதியிலான ஆதரவுச் செயற்பாடும் அவசியம். இத்தகைய தேசிய ரீதியிலான ஒத்துழைப்பின்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவரது அரசும் மந்திரத்தில் மாங்காய் வீழ்த்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதையே காண முடிகின்றது.
மக்களுடைய ஒன்றிணைதலும் ஒன்றிணைந்த கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திர நடவடிக்கையும், அரசாங்கம் குறிப்பிடுவதைப் போன்று நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கை அல்ல. அந்த அரசியல் உரிமையை அடிப்படை ஜனநாயக உரிமையை அதிகார பலத்தைப் பயன்படுத்தி அடக்கி ஒடுக்க முற்படுவதே பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கின்ற நடவடிக்கையாகும். அதுவே பயங்கரவாதச் செற்பாடாகும்.
எனவே நாட்டின் அரசியல் நிலைப்பாடு மற்றும் ஆட்சியியல் போக்கானது, பொருளதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான பொருளாதார நெருக்கடி தளர்வு நடவடிக்கையாக மட்டும் தோற்றவில்லை. நாட்டு மக்களால் ஒன்றிணைந்த நிலையில் ஒதுக்கிப் புறந்தள்ளப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியைத் தூசி தட்டித் தலைநிமிரச் செய்வதற்கும், மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தின் மூலம் தூக்கி எறியப்பட்ட பொதுஜன பெரமுன கட்சி பலப்படுத்தி நிரந்தரமாக ஆட்சி பீடத்தில் நிறுத்துவதற்குமான வெறும் சுயலாப அரசியல் நடவடிக்கையாகவே தோன்றுகின்றது.