பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தல் திருத்தங்கள் தொடர்பான விவாதத்தின் போது, மாகாண சபை தேர்தலை மேலும் தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் ஒரு முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய (17) பாராளுமன்ற அமர்வின்போது, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களுடன் மாகாண சபை தேர்தலையும் உள்ளடக்கி, தேர்தல் முறைகளை ஆய்வு செய்ய ஒரு புதிய “தெரிவுக்குழுவை” அமைக்க முன்மொழிந்தார்.
எனினும், அமைச்சர்கள் பிமல் ரத்னாயக்க மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் மாகாண சபை தேர்தலை குறைந்தது ஒரு வருடமாவது தள்ளிப்போடும் நோக்கில் இந்த புதிய குழுவை அமைக்கும் திட்டத்தை, பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடுமையாக எதிர்த்தார்.
மாகாண சபை தேர்தல் முறைமை குறித்து ஏற்கனவே ஒரு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று இவ்வருடம் ஜனவரி மாதத்தில் நியமிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், அதே விடயத்திற்காக இரண்டாவது குழுவை அமைப்பது பாரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்று சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
புதிய குழு அமைக்கப்பட்டால், அதன் அறிக்கை வரும் வரை தேர்தலை நடத்த முடியாது என்று கூறி அரசாங்கம் தேர்தலை மேலும் ஒரு வருடம் வரை பிற்போட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சாணக்கியனின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து சபையில் நீண்ட வாக்குவாதம் நிலவியது.
இறுதியாக, அவரது கோரிக்கைக்கு இணங்க, ரவி கருணாநாயக்கவின் முன்மொழிவிலிருந்து “மாகாண சபை தேர்தல்” என்ற பகுதி நீக்கப்பட்டது.
இதன்மூலம், மாகாண சபை தேர்தலை தாமதப்படுத்துவதற்கு “தெரிவுக்குழு ஆய்வு” என்ற காரணத்தை அரசாங்கம் பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் பரப்பில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை நிலைநாட்ட இது ஒரு முக்கியமான வெற்றியாகவும் பார்க்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.



