அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து அம்பிகா சற்குணநாதன் கருத்து

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்பட உள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்ந்தும் பாதுகாப்பு துறையினருக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் சட்ட வரைவாக காணப்படுவதாக இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பாக சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் 1979ஆம் ஆண்டு தற்காலிகமாக கொண்டுவருகிறோம் எனக்கூறி கொண்டுவரப்பட்டாலும் 1982இல் நிரந்தரமாக்கப்பட்டு இன்று வரை பயங்கரவாத தடைச் சட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது

பயங்கரவாதம் என்றால் என்ன என்பது தொடர்பில் சரியான வரவிலக்கணம் தெரியாத ஒரு சட்டமாக பாதுகாப்பு துறையினர் தாங்கள் விரும்பிய அர்த்தத்தில் வழக்குத் தாக்கல் செய்கின்ற ஒரு சட்டமாக பயங்கரவாத தடைச் சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த சட்டம் வடக்கு கிழக்கு பகுதிகளில் பிரயோகிக்கப்பட்டாலும் கொழும்பில் இடம்பெற்ற போராட்டங்களை அடக்குவதற்காக கடந்த அரசாங்கத்தினால் பலர் குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்.

அப்போதுதான் இந்தச் சட்டத்தின் ஆபத்து தொடர்பில் தெற்கில் உள்ளவர்கள் உணரக்கூடியதாக சூழ்நிலை உருவாகியதாக அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் தன்னிடம் ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி ஒரு வருடம் கடந்த நிலையிலும் நீக்கப்படவில்லை.

தற்போது சில திருத்தங்களை மட்டும் மேற்கொண்டு அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்ற பெயருடன் ஒரு வரவை தயாரித்து முடித்திருக்கிறார்கள். தற்போது பயன்பாட்டில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அடக்கும் ஒரு சட்டமாக செயற்பட்டு வந்திருக்கின்ற நிலையில் தற்போது புதிய வரைவும் அதே செயற்பாட்டை மேற்கொள்ளக்கூடிய விதத்தில் தயாரிக்கப்பட்டமை ஆபத்தான விடயமாகும் என்று அவர் கூறியுள்ளார். இந்த கலந்துரையாடலில் பல சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.