சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்கவேண்டும் என்ற போதிலும் இன்றைய இலங்கையில் அந்த சட்டம் சிலருக்கு கவசமாகவும் மற்றவர்களுக்கு அடக்குமுறைக்கான ஆயுதமாகவும் மாறியுள்ளது என்று சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான விவகாரம் இதற்கு மிகத் தெளிவான உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (23) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத கட்டடமான திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்றுமுன்தினம் (21) நடத்தப்பட்ட போராட்டத்தில் இந்து மத குரு உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டாலும், போராட்டத்தின்போது பொலிஸாரின் நடவடிக்கை, போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்த விதம் சிங்கள பௌத்தத்தின் கோர முகத்தினை காட்டியுள்ளது.
அதுமட்டுமல்லாது, “இனவாத மதவாதத்தினை இல்லாமல் செய்வோம்” என அடிக்கடி அலங்கார வசனம் பேசும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினதும் அவரது தலைமைத்துவத்திலான தேசிய மக்கள் சக்தியினதும் அகோர முகத்தினையும் வெளிக்காட்டியது.
இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியதே என்றும் சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரை நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. இன அமைதிக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழர்களுக்கு எதிரான இன்னொரு சுற்று இன அழிப்புப் போருமாகும் என்றும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அன்று முப்படைகள் செய்ததை இன்று அவர்களின் துணையோடு பௌத்த மகா சங்கம் நேரடியாக களத்தில் இறங்கி வெளிப்படையாகவே செய்வதாக தோன்றுகின்றது. தேசிய மக்கள் சக்தியும் அவர்களின் காலடியில் விழுந்து அரசியல் செய்வதாக தமிழ் மக்கள் உணர்கின்றனர் என்றும் சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.



