அரசியலமைப்பு திருத்தமின்றி முன்னாள் ஜனாதிபதிகளின் அனைத்து வரப்பிரசாதங்களை குறைக்க முடியும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

‘அரசியலமைப்பில் திருத்தம் செய்யாமல் முன்னாள் ஜனாதிபதிகளின் அனைத்து வரப்பிரசாதங்களையும் குறைக்க முடியும்’ என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்தது.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பிலேயே அதிகளவு பேசப்பட்டது.

கொழும்பு விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் வாடகை தொடர்பாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பல சந்தர்ப்பங்களில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், புதிய அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்களால் அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் தங்களது உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அதேநேரம் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை அரசியலமைப்பு திருத்தத்திற்குப் பின்னரே குறைக்கவோ அல்லது திருத்தவோ முடியும் என சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தநிலையில் ‘அரசியலமைப்பை திருத்தாமல் நீக்கப்படக் கூடிய முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் மற்றும் சலுகைகள் அனைத்தும் நீக்கப்படும்’ என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.