யாழில் காற்று மாசுக் கட்டுப்பாடு: மேல்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய உத்தரவு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள மற்றும் இனிமேல் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை யாழ்ப்பாண மாநகர சபை இன்று (24) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

யாழ்ப்பாணப் பகுதியில் முறையான கழிவு அகற்றல் திட்டம் இல்லாததால், குப்பைகள் எரிக்கப்படுவதன் மூலம் கடுமையான காற்று மாசுபாடு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டி, மருத்துவர் உமாசுகி நடராஜா இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த பகுதியில் காற்று மாசைக் குறைப்பதற்கான முறையான செயல்திட்டமொன்றை உருவாக்குமாறு மாநகர சபை உள்ளிட்ட தரப்பினருக்கு உத்தரவிடுமாறு அவர் தனது மனுவில் கோரியிருந்தார். மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொகந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மாநகர சபை சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்த நீதியரசர்கள் சில உத்தரவுகளைப் பிறப்பித்தனர். மாநகர சபை சமர்ப்பித்த திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பையும், உதவிகளையும் மத்திய சுற்றாடல் அதிகார சபை, சுற்றாடல் அமைச்சு மற்றும் ஏனைய பிரதிவாதிகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

அத்துடன், பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், இதனை ஒரு தேசிய நலன் சார்ந்த பணியாகக் கருதி முன்னெடுக்குமாறு பிரதிவாதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டது.